சேத்தியாத்தோப்பு, ஜூலை 10: சேத்தியாத்தோப்பு அருகே மழவராயநல்லூர் கிராமத்தில் உள்ள எம்ஜிஆர் நகரில் 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் கிராமத்திற்கு செல்லவும், வெளியே செல்லவும் சரியான வழித்தடம் இல்லாமல் உள்ளது. இருக்கும் வழித்தடமும் ஆக்கிரமிப்பில் இருப்பதால் குடியிருப்பு வாசிகள் தங்கள் பகுதியில் இருந்து வெளியே வர மிகவும் சிரமப்பட்டு வந்தனர். மேலும் தற்போது உள்ள வழியால் நடந்து செல்ல மட்டுமே முடியும். வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்ல முடியாது. இதுகுறித்து வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் ஆக்கிரமிப்பு அகற்றப்படவில்லை.
இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி அப்பகுதி மக்கள் முஷ்ணம்- சேத்தியாத்தோப்பு சாலையில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்களிடம் காவல்துறை உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்து கலைந்து செல்ல செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தொடர்ந்து இதேபோன்ற நிலை நீடிக்குமானால் அரசு அதிகாரிகளை சிறை பிடித்து முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இதன் பின்னர் வருவாய்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு இடம் அளவீடு செய்யப்பட்டு எல்லை வரையறைக்காக கருங்கற்கள் நடப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் ஆக்கிமிப்பு இடத்திற்கு முறைப்படி நோட்டீஸ் வழங்கப்பட்டு அகற்றப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல் appeared first on Dinakaran.