பாஜ நிர்வாகியின் போதை மறுவாழ்வு மையத்தில் குடியை நிறுத்துவதாக கூறி அடித்து துன்புறுத்தியதில் ஒருவர் உயிரிழப்பு: சீல் வைத்து 23 பேர் மீட்பு; 6 பேர் கைது

கள்ளக்குறிச்சி: பாஜ நிர்வாகி நடத்தி வரும் போதை மறுவாழ்வு மையத்தில் குடியை நிறுத்துவதாக கூறி அடித்து துன்புறுத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து அதிகாரிகள் அந்த மையத்துக்கு சீல் வைத்தனர். 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் அருகே குச்சிப்பாளையம் கிராம பகுதியில் தனியார் போதை மறுவாழ்வு மையம் அரசு அனுமதியுடன் இயங்கி வருகிறது. இந்த மறுவாழ்வு மையத்தை பாஜ முன்னாள் நிர்வாகி காமராஜ் என்பவர் லோட்டஸ் பவுண்டேஷன் டிரஸ்ட் அமைத்து அதன் மூலம் நடத்தி வருகிறார். இங்கு 26 பேர் சிகிச்சை பெற்று வந்தனர்.

இங்கு நீண்ட நாட்களாக குடியை நிறுத்தாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி வருபவர்களுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சிகிச்சைக்காக ரூ.50 ஆயிரம் வரை வசூலித்ததாக கூறப்படுகிறது. ஆனால், குடிப்பழக்கத்துக்கு ஆளானவர்களுக்கு அதை நிறுத்த முறையான சிகிச்சை அளிக்காமல் அவர்களை அடித்து துன்புறுத்தி வந்ததாக புகார்கள் எழுந்தன. கடந்த 7ம் தேதி மறுவாழ்வு மையத்தில் இருந்தவர்கள் அங்கிருந்த திருக்கோவிலூர் ஜா.சித்தாமூர் கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (38) என்பவரை அடித்து துன்புறுத்தியதில் அவரது உடல்நிலை மோசமானதால் திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் இறந்துவிட்டார். இதுபற்றி ராஜசேகரின் மனைவி ராஜாமணி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தகவலறிந்து சுகாதாரத்துறை அதிகாரிகள் குச்சிப்பாளையம் போதை மறுவாழ்வு மையத்திற்கு நேற்று முன்தினம் மாலை நேரில் சென்று விசாரணை செய்தனர். அதில் முறையான சிகிச்சை அளிக்காமல், அங்கு சிகிச்சைக்கு சேர்ந்தவர்களை அடித்து துன்புறுத்தி வந்தது தெரியவந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்றுவந்த 23 பேரையும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் நள்ளிரவு மாற்றினர். அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மனநல மருத்துவர்கள் மூலம் கவுன்சலிங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவுண்டேஷன் நிர்வாகி திருக்கோவிலூரை சேர்ந்த காமராஜ் (54), கவுஸ் பாட்ஷா (44), எத்துராஜ் (43), பிரவீன் குமார் (26), ஜமால் (30), ஆனந்தராஜ் (32) ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.

The post பாஜ நிர்வாகியின் போதை மறுவாழ்வு மையத்தில் குடியை நிறுத்துவதாக கூறி அடித்து துன்புறுத்தியதில் ஒருவர் உயிரிழப்பு: சீல் வைத்து 23 பேர் மீட்பு; 6 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: