பார்சன்ஸ்வேலி சாலையில் அபாயகர மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை

ஊட்டி : நீலகிரி மாவட்டம் ஊட்டியில் இருந்து சுமார் 17 கி.மீ தொலைவில் பார்சன்ஸ்வேலி பகுதி அமைந்துள்ளது. நீலகிரி வன கோட்டத்திற்குட்பட்ட இப்பகுதியில் 6க்கும் மேற்பட்ட தோடர் பழங்குடியின கிராமங்கள் உள்ளன.பார்சன்ஸ்வேலி பகுதியில் சுமார் 15க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதுதவிர பார்சன்ஸ்வேலி அணை ஊட்டி நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், மின் உற்பத்திக்கு ஆதாரமாகவும் உள்ளது. இப்பகுதியில் மின்வாரிய குடியிருப்பு உள்ளிட்டவைகள் உள்ளன. ஊட்டியில் இருந்து அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் அரசு பஸ் இயக்கப்படுகிறது. இதனிடையே தீட்டுக்கல் முதல் பார்சன்ஸ்வேலி வரை 10 கி.மீ வரை இச்சாலை வனப்பகுதி வழியாக செல்கிறது.

பருவமழை காலங்களில் பலத்த சூறாவளி காற்று வீசும் போது மரங்கள் சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்படுவது வழக்கம். இதனால் பொதுமக்கள் பழங்குடியின மக்கள் பாதிப்படைகின்றனர். இந்நிலையில் இச்சாலையில் பல இடங்களில் அபாயகரமான மரங்கள் தொங்கிய நிலையில் காணப்படுகின்றன. இவற்றை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், இச்சாலையில் ராட்சத கற்பூர மரங்கள், சீகை மரங்கள் உள்ளிட்டவைகள் அதிகளவில் காணப்படுகின்றன. இவை அவ்வப்போது சாலையில் விழுந்து போக்குவரத்து பாதிப்புகள் ஏற்பட கூடிய சூழல் உள்ளது. எனவே அபாயகர மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என்றனர்.

The post பார்சன்ஸ்வேலி சாலையில் அபாயகர மரங்களை அகற்ற வாகன ஓட்டிகள் கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: