பெருநாவலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி

அறந்தாங்கி, ஜூலை 7: புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் அருகே பெருநாவலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரியில் உள்ள திருவள்ளுவர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குக் கல்லூரி முதல்வர் (பொ) பேராசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். கல்லூரி அனைத்து துறை தலைவர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி இணைப் பேராசிரியர் மற்றும் தமிழ்த்துறைத்தலைவர் முனைவர் சேதுராமன் கலந்து கொண்டு, வானம் வசப்படும் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவர் பேசுகையில், வாழ்க்கை என்னும் சொல்லில் முதல் எழுத்தையும், நிறைவெழுத்தையும் எடுத்துக்கொண்டால் வாகை என்கிற வெற்றி கிடைக்கும்.

ஆக வாழ்க்கையில் வாகை இருக்கிறது. நம்முடைய வாழ்க்கை சாதாரண வாழ்க்கை அல்ல. சவால்கள் நிறைந்த வாழ்க்கை. சவால்களை எதிர்கொள்ளும் வாசலாக நம் வாழ்க்கை நகர்கிறது. தாயின் கருவறையைப்போல இப்போது நீங்கள் பயிலும் வகுப்பறை மிகப் புனிதமானது. பெற்றோரின் கருணையும், ஆசிரியர்களின் அரவணைப்பும் உங்கள் வாழ்க்கையைச் செம்மைப்படுத்துகிறது. கல்விதான் எங்கள் இன்றைய நிலைக்கு அடிப்படை. ஒரு மனிதன் எதுவும் இல்லாமல் இருந்து விடலாம். ஆனால் கல்வி இல்லாமல் வாழமுடியாது. பெற்றோர் ஒரு சிறகு, ஆசிரியர்கள் மற்றொரு சிறகு. மாணவர்கள் இந்த இருசிறகுகளால் உலகை வலம் வந்தால் வானம் வசப்படும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவ, மாணவியருக்கு வழிகாட்டு குறிப்பேடு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், கல்லூரிக் கண்காணிப்பாளர் மற்றும் அலுவலக பணியாளர்கள், கல்லூரி யூத் ரெட் கிராஸ் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கணேஷ்குமார், ரெட் ரிப்பன் கிளப் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார்,ஆங்கிலத்துறை பேராசிரியர் ஜீவரத்தினம் ஆகியோர் வழிகாட்டுதலில், நாட்டு நலப்பணித் திட்டம் அலகு-1 மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி தமிழ்துறை தலைவர் முனைவர் காளிதாஸ் வரவேற்றார். கல்லூரி நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் பழனிதுரை நன்றி கூறினார்.

 

The post பெருநாவலூர் அரசு கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: