அரசு உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு ஜவ்வாதுமலை அடுத்த அரசவெளி

போளூர், ஜூலை 6: ஜவ்வாதுமலை அடுத்த அரசவெளி அரசு உண்டு உறைவிட உயர்நிலை பள்ளியில் கூடுதல் கட்டிடம் கட்டும் இடத்தை கலெக்டர் தெ.பாஸ்கரபாண்டியன் ஆய்வு செய்தார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை ஒன்றியம் ஜவ்வாதுமலை அடுத்த அரசவெளி கிராமத்தில் அரசு பழங்குடி நலத்துறை உண்டு உறைவிட உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1 முதல் 10ம் வகுப்பு வரை 275 மலைவாழ் மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு மாணவர்கள் விடுதியில் தங்கி படிக்கின்றனர். இதனால் இடபற்றாக்குறை உள்ளது. இதனால் கூடுதல் பள்ளி கட்டிடம் கட்டவேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு இடம் ஒதுக்கப்பட்டது இந்த இடத்தை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது நீதிமன்ற உத்தரவின்படி அங்குள்ள ஆக்கிரமிப்புகளையும் அகற்றி விட்டு பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு ஆலோசனை வழங்கினார். மேலும் பள்ளி கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வனத்துறை அனுமதி பேரில் ஜமுனாமரத்துரில் செயல்படும் வனத்துறை பள்ளி கட்டிடத்தை பயன்படுத்திக் கொள்ள உத்தரவிட்டார்.

இதைொடர்ந்து மாணவர்களின் கல்வி திறனை ஆய்வு செய்தார். மாணவர்களின் தேவைகள் அறிந்து அதனை நிறைவேற்றும் விதத்தில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வகுப்பறைகளையும் மற்றும் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் பள்ளி வகுப்பு வரை ஆய்வு மேற்கொண்டு அவர்களை அடிப்படை வசதிகளை நிவர்த்தி செய்யும் விதத்தில் அருகில் உள்ள வனத்துறை பள்ளி கட்டுப்பாட்டில் உள்ள வகுப்பறைகளை வழங்குவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். மேலும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மாணவர்களை தனித்தனியாக அழைத்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்தார். மாணவர்களுக்கு வழங்கும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்தார். மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார். பின்னர் மாணவர்களுக்கு பாடங்களை கற்பித்தார். மாணவர்களும் ஆர்வமாக பாடங்களை கற்றுகொண்டனர். அப்போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மு.பிரியதர்ஷினி, கூடுதல் ஆட்சியர் செ.ஆ.ரிஷப், கோட்டாட்சியர் எஸ்.பாலசுப்ரமணியன், ஒன்றிய குழு தலைவர் எம்.ஜீவாமூர்த்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் த.செந்தில்குமார், தாசில்தார் ப.மனோகரன், மறறும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

The post அரசு உண்டு உறைவிட பள்ளியில் கலெக்டர் திடீர் ஆய்வு ஜவ்வாதுமலை அடுத்த அரசவெளி appeared first on Dinakaran.

Related Stories: