இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு

லண்டன்: இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் உமா குமரன் வெற்றி பெற்றார். இங்கிலாந்தில் நடந்த பொதுத் தேர்தலையொட்டி, மொத்தமுள்ள 650 தொகுதிகளில் நேற்று விறுவிறுப்பாக வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் கியெர் ஸ்டார்மர் தலைமையிலான தொழிலாளர் கட்சியானது, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரதமர் ரிஷி சுனக் தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சியை தோற்கடித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தத் தேர்தலில் அதிகளவில் இந்தியர்கள் போட்டியிட்டனர். இந்நிலையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட தமிழ்ப் பெண் உமா குமரன், லண்டன் ஸ்டராட்ஃபோர்டு தொகுதியில் 19,145 வாக்குகளை பெற்று மாபெரும் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளரான கேன் பிளாக்வெல், 3,144 வாக்குகள் மட்டும் பெற்று 4வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.

ஈழத் தமிழ்ப் பெண்ணான உமா குமரன், இங்கிலாந்து வரலாற்றில் முதல் தமிழ் எம்பியாக தேர்வாகி உள்ளார். இவரது குடும்பம் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போருக்கு பின்னர் இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தனர். தற்போது இங்கிலாந்து எம்பியாக தேர்வான உமா குமரனை, உலகெங்கும் உள்ள தமிழர்கள் பாராட்டி வருகின்றனர். இந்த வெற்றி குறித்து உமா குமரன் வெளியிட்ட பதிவில், `ஸ்ட்ராட்ஃபோர்ட் மற்றும் போவின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டது எனது வாழ்க்கையின் பெருமை. என் மீதும், தொழிலாளர் கட்சி மீதும் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நன்றி. நான் எப்போதும் உங்கள் குரலாகவும், உங்கள் பிரதிநிதியாகவும் இருப்பேன். நான் எப்போதும் உங்களை வீழ விட மாட்டேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

 

The post இங்கிலாந்து தேர்தலில் ஈழ தமிழ் பெண் வெற்றி: உலக தமிழர்கள் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: