கல்வி உதவித்தொகை, கடன் தருவதாக வரும் மோசடி செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்

*மாவட்ட எஸ்பி ராஜாராம் அறிவுரை

கடலூர் : கல்வி உதவித்தொகை, கல்வி கடன் குறித்து மோசடி செல்போன் அழைப்புகளை நம்பி யாரும் பணம் செலுத்த வேண்டாம் என்று கடலூர் மாவட்ட எஸ்பி ராஜாராம் கூறியுள்ளார்.
இதுகுறித்து மாவட்ட எஸ்பி ராஜாராம் நிருபர்களிடம் கூறுகையில், தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இதை பயன்படுத்தி மோசடி நபர்கள் சிலர் மாணவ, மாணவிகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு, கல்வி கடன் பெறுவதற்கு வங்கிகளில் இருந்து பேசுவதாகவும், கல்வி கடன் உடனடியாக கிடைக்க வேண்டுமானால் பரிசீலனை கட்டணம் செலுத்தினால் விரைவாக கல்வி கடன் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

இதை நம்பி ஏமாறும் சிலர், தங்களுக்கு உடனடியாக கல்வி கடன் கிடைக்கும் என்ற நினைப்பில் ஒரு தொகையை செலுத்தி விடுகின்றனர். ஆனால், அதற்குப் பிறகு அந்த மோசடி நபர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. கல்வி கடனுக்காக எந்த ஒரு வங்கியும் பரிசீலனை கட்டணம் கேட்பதில்லை. இதேபோல 10, 12ம் வகுப்பு படித்து முடித்த மாணவ, மாணவிகளின் பெற்றோரை தொடர்பு கொண்டு தங்கள் மகன், மகளுக்கு கல்வி உதவித்தொகை வந்துள்ளது. மேலும் இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கும் சேர்த்து வந்துள்ளது. அதை பெற வேண்டுமானால் நாங்கள் ஒரு கியூஆர் கோட் அனுப்புவோம் அதை ஸ்கேன் செய்யுங்கள் என்று கூறுகின்றனர்.

மேலும் ஒரு குறிப்பிட்ட எண்களை சொல்லி அதை பதிவிட சொல்கின்றனர். ஆனால், அந்த எண்கள் குறிப்பிட்ட தொகையாக இருக்கிறது. அதை அழுத்தியவுடன் அவரது வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விடுகிறது. இதன் பிறகு அந்த எண்களை தொடர்பு கொண்டால் அது சுவிட்ச் ஆப் என்று வருகிறது. இதேபோல தற்போது டிஜிட்டல் போலீஸ் என்று போலியாக குறிப்பிட்ட நபர்களுக்கு போன் செய்து, உங்களை உங்கள் அறையிலேயே வைத்து கைது செய்து விட்டோம்.

நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்க வேண்டும். உங்கள் வங்கி கணக்குகள் மூலம் பல்வேறு தீவிரவாத இயக்கங்களுக்கு பணம் சென்றுள்ளது. பல்வேறு வங்கி கணக்கில் உள்ள பணத்தை ஒரே வங்கி கணக்கில் அனுப்பி எங்களுக்கு அனுப்புங்கள் என்று கூறி மிரட்டி பணத்தை பறித்து வருகின்றனர். இதேபோல போலி கடன் ஆப்கள் மூலம் ஒரு நபரின் ஆதார் எண், பான் எண்ணை பெற்று அவர்களுக்கு ஒரு சிறிய தொகையை அனுப்பி வைக்கின்றனர். பின்னர் அந்த பணத்தை திரும்பி செலுத்தாவிட்டால் அவர்களது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு மிரட்டி வருகின்றனர். இதேபோல மோசடி நபர்கள் தொழிலில் முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றுவது, திருமண இணையதளங்கள் மூலம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பணம் பெற்று ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வழிகளில் ஏமாற்றி வருகின்றனர்.

குறிப்பாக கல்வி உதவித்தொகை தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் ஒரு திட்டமே கிடையாது. ஆனால் கல்வி உதவித்தொகை தருவதாக கூறி ஏமாற்றப்பட்டதாக கடலூரில் மட்டும் இதுவரை 13 புகார்கள் வந்துள்ளன. இதில் ரூ.1 லட்சம் வரை பொதுமக்கள் பணத்தை இழந்துள்ளனர். இதுகுறித்து மாணவ, மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு அந்த சுற்றறிக்கையை இறைவணக்க கூட்டத்தில் மாணவ, மாணவிகளுக்கு படித்து காட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற மோசடிகளை தடுக்க தெரியாத நபர்களிடமிருந்து வாட்ஸ்-அப் மூலம் அழைப்பு வந்தால் அதற்கு பதில் அளிக்க வேண்டாம்.

இது போன்று மோசடி அழைப்புகள் வந்தால் உடனடியாக 1930 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும். மேலும் பணம் ஏமாற்றப்பட்ட 6 மணி நேரத்துக்குள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தால் சம்பந்தப்பட்ட நபர்கள் இழந்த பணத்தை மீட்டு தர எளிதாக இருக்கும். பொதுவாக திருட்டு சம்பவங்கள், கொள்ளை சம்பவங்கள் ஆகியவற்றில் பறிபோகும் நகை மற்றும் பணத்தை 70 முதல் 80 சதவீதம் வரை மீட்டு விடலாம்.

ஆனால், இதுபோன்று டிஜிட்டல் முறையில் ஏமாற்றப்படும் பணத்தை மீட்பது ஒரு சதவீத அளவிலேயே வாய்ப்பு உள்ளது. பொதுவாக இந்த விஷயத்தில் படித்தவர்களே அதிகம் ஏமாற்றப்படுகிறார்கள். எனவே, பொதுமக்கள் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். போலியான மோசடி நபர்களிடமிருந்து வரும் அழைப்புகளை கட்டாயம் தவிர்க்க வேண்டும், என்றார். சைபர் கிரைம் ஏடிஎஸ்பி பிரபாகரன், தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் செந்தில் விநாயகம், எஸ்பியின் செய்தி தொடர்பாளர் ராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

The post கல்வி உதவித்தொகை, கடன் தருவதாக வரும் மோசடி செல்போன் அழைப்புகளை நம்பி ஏமாற வேண்டாம் appeared first on Dinakaran.

Related Stories: