ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம்

ஊத்துக்கோட்டை: ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் 5 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கங்களின் கூட்டமைப்பு நேற்றுமுன்தினம் இரவு அவசர தீர்மானத்தை நிறைவேற்றியது.

அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள கூட்டமைப்பின் தலைமை நிர்வாகிகள், மண்டலச் செயலாளர்கள், வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டறிந்து அவசர தீர்மானம் நிறைவேற்ப்பட்டுள்ளது. அதன்படி ஒன்றிய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி நமது கூட்டமைப்பு தொடர் போராட்டங்கள் நடத்தி வருவது
யாவரும் அறிந்ததே. அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக நடைமுறைப்படுத்தியுள்ள புதிய குற்றவியல் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி இன்று முதல் (நேற்று) வரும் 6ம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதி மன்றங்களில் வழக்கறிஞர்கள் பணி செய்யாமல் விலகியிருக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.

மேலும் 5ம் தேதி காலை 11 மணியளவில் மாவட்ட நீதிமன்ற நுழைவுவாயில் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. நமது கூட்டமைப்பின் நிர்வாகிகள் அந்தந்த வழக்கறிஞர் சங்கங்களுடன் இணைந்து ஆர்பாட்டங்களை சிறப்பான வகையில் நடத்திட ஏற்பாடு செய்திடவும், அனைத்து வழக்கறிஞர்களும் ஒத்துழைப்பு நல்கிடவும் கேட்டுக்கொள்கிறேன். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசித்து 7ம் தேதி அறிவிக்கப்படும் என அந்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக கூறியுள்ளனர்.

இதனை தொடர்ந்து ஊத்துக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் வேல்முருகன் தலைமையில் செயலாளர் கவிபாரதி, பொருளாளர் நரசிம்மன் முன்னிலையில் நேற்று முதல் 5 நாட்கள் நீதிமன்ற புறக்கணிப்பு செய்வது என முடிவு செய்து, நீதிமன்ற பணிகளை புறக்கணித்துள்ளனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து 5 நாட்கள் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு: அவசர தீர்மானம் நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Related Stories: