இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

சென்னை: மகளிர் தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது. இதன் பயனாக இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவீத தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் 2.O மூலமாக TN-RISE (Tamil Nadu Rural Incubator and Start-Up Enabler) நிறுவனத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் நேற்று தொடங்கி வைத்து பேசியதாவது: மகளிர் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக “வாழ்ந்து காட்டுவோம் 2.0 திட்டமானது கிராமப்புறத் தொழில்களை ஊக்குவித்து வருகிறது. மகளிர் வேலைக்கு செல்கிறார்கள் என்ற நிலையை, மகளிர் 4 பேருக்கு வேலை கொடுக்கிறார்கள் என்று மாற்றிட அவர்களை தொழில் முனைவோர் ஆக்குவதற்கான திட்டங்களை திமுக அரசு செயல்படுத்தி வருகிறது.

இதன் பயனாக இன்றைக்கு இந்தியாவில் இருக்கிற மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5 சதவீத தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் இருக்கிறது. இந்த வெற்றி பயணத்தின் மற்றுமொரு மைல்கல்லாக, தமிழ்நாடு ஊரக தொழில் காப்பு மற்றும் புத்தொழில் உருவாக்கு நிறுவனத்தை இப்போது அரசு தொடங்கியிருக்கிறது. தொழில் செய்வதற்கு ஏற்ற தேவையான நவீன கட்டமைப்பு, உற்பத்தி மேம்பாடு, பேக்கிங், பிராண்டிங், மார்க்கெட்டிங், நிதி மேலாண்மை, நிறுவன உருவாக்கம், நிறுவன செயல்பாடு என மகளிர் தொழில் முனைவோருக்கான உதவிகளை A to Z வழங்குவதற்காக தான் இந்த TN-RISE நிறுவனம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மகளிர் தொழில் முனைவோர்களும், தொழிலதிபர்களும் இருக்கிறார்கள் என்கிற வரலாற்று சாதனையை எட்ட நாம் அனைவரும் சேர்ந்து உழைப்போம்.

The post இந்தியாவில் மகளிரால் நடத்தப்படும் தொழில் நிறுவனங்களில் 13.5% நிறுவனங்கள் தமிழ்நாட்டில் உள்ளது: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: