40 வயது ‘தேன்நிலவு’க்கு 32 வயது வாலிபர்கள் போட்டி கள்ளக்காதலியை அபகரித்ததால் தொழிலதிபரை கொன்ற மேஸ்திரி

மேட்டூர்: காதலியை அபகரித்ததால், பிளாஸ்டிக் ஆலைக்குள் புகுந்து தொழிலதிபரை வெட்டி கொலை செய்த வாலிபர் உட்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே கருப்பூர் ஏரிக்காடு பகுதியைச் சேர்ந்தவர் சுபாஸ் சந்திரபோஸ்(32), திருமணமாகாத இவர், மேச்சேரி அருகே பறவைகாட்டில் பிளாஸ்டிக் பொருட்களை உருக்கி மூலப்பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை வாடகைக்கு எடுத்து நடத்தி வந்தார். கடந்த 28ம் தேதி அங்கு வந்த வாலிபர் திடீரென கொடுவாளால் சரமாரி வெட்டியதில் சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்தார்.

புகாரின்படி மேச்சேரி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். கொலை நடந்த நேரத்தில் அப்பகுதியில் உள்ள செல்போன் டவரில் பதிவான செல்போன் எண்கள், சிசிடிவி பதிவுகளை வைத்து விசாரணை நடைபெற்றது. இதில், பொம்மியம்பட்டியைச் சேர்ந்த வெங்கடேஷ்(31) என்ற கட்டிட மேஸ்திரி, சுபாஸ் சந்திரபோஸை கொலை செய்தது தெரியவந்தது. பதுங்கி இருந்த வெங்கடேஷை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவரது வாக்குமூலம் குறித்து போலீசார் கூறியதாவது: வெங்கடேசுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில் மனைவியை பிரிந்து வாழ்ந்துள்ளார். கடந்த இரண்டரை ஆண்டுக்கு முன்பு ஏற்காட்டிற்கு வேலைக்கு சென்ற இடத்தில், கணவரை பிரிந்து வாழ்ந்த தேன்நிலவு (40) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, கணவன் -மனைவி போல் வாழ்ந்துள்ளனர். கருப்பூரில் இவர்கள் குடியிருந்தபோது சுபாஸ் சந்திரபோசுக்கு தேன்நிலவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அவரை அடிக்கடி சந்தித்துள்ளார்.

இதை அறிந்த வெங்கடேஷ், அவர்களின் தொடர்பை துண்டிக்கும் வகையில் ஓமலூர் அம்பேத்கர் நகருக்கு குடிபெயர்ந்தார். ஆனாலும், சுபாஸ் சந்திரபோஸ் அடிக்கடி தேன்நிலவுடன் செல்போனில் பேசி வந்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 25ம் தேதி இரவு தேன்நிலவை வெங்கடேஷ் கண்டித்துள்ளார். சிறிது நேரத்தில் தேன்நிலவு வீட்டிலிருந்து மாயமானார். சுபாஸ் சந்திரபோசுடன் தேன்நிலவு சென்றதாக சிலர் கூறியுள்ளனர்.

இதனால், ஆத்திரமடைந்த வெங்கடேஷ், இருவரையும் தேடி பறவைக்காட்டிற்கு சென்றார். இரண்டு நாட்களாக அவர் சிக்காததால், காதலியை அவர்தான் மறைத்து வைத்திருக்க வேண்டும் என நம்பினார். இதையடுத்து, சம்பவத்தன்று காலை பொம்மியம்பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்பவருடன் பைக்கில் பிளாஸ்டிக் தொழிற்சாலை பக்கம் சென்றார். மறைவான இடத்தில் தினேஷை நிற்க வைத்து விட்டு ஆலைக்குள் சென்று, அவரிடம், தேன்நிலவை எங்கே மறைத்து வைத்திருக்கிறாய் என கேட்டார். இதில் அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது, ஆத்திரமடைந்த வெங்கடேஷ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரி வெட்டியுள்ளார். இதில், படுகாயமடைந்த சுபாஷ் சந்திரபோஸ் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரிடம், ‘‘எனது காதலியை எனக்கு கொடுத்துவிடு. உன்னை விட்டு விடுகிறேன். மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறேன்’’ என தெரிவித்துள்ளார்.

ஆனால், தேன்நிலவு குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதால் அவரை சாகும்வரை வெட்டி விட்டு வெங்கடேஷ் தப்பி சென்றார். கொலை செய்த பிறகும் காதலி மீதான மோகத்தில் அவரை ஏற்காடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெங்கடேஷ் தேடி அலைந்துள்ளார். இறுதியில் போலீசில் சிக்கிக் கொண்டார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்த தினேஷையும் போலீசார் கைது செய்தனர். மாயமான தேன்நிலவு என்ன ஆனார் என்றும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

* உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவரிடம், ‘‘எனது காதலியை எனக்கு கொடுத்துவிடு. உன்னை விட்டு விடுகிறேன். மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றுகிறேன்’’என தெரிவித்துள்ளார். ஆனால், தேன்நிலவு குறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என கூறியதால் அவரை சாகும்வரை வெட்டி விட்டு வெங்கடேஷ் தப்பி சென்றார்.

The post 40 வயது ‘தேன்நிலவு’க்கு 32 வயது வாலிபர்கள் போட்டி கள்ளக்காதலியை அபகரித்ததால் தொழிலதிபரை கொன்ற மேஸ்திரி appeared first on Dinakaran.

Related Stories: