கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடங்களை ஒதுக்குவதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

சென்னை: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கான 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை பள்ளிகளை சேர்க்க இயலாது என்று தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதார ரீதியில் பின்தங்கிய பிரிவினருக்கு தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கும் போது, ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை என்ற காரணத்தின் அடிப்படையில் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக கோவையைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முகசுந்தரம், ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் வசிக்கவில்லை என்று காரணம் கூறி விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவது தவறு.

ஆந்திராவில் இதுசம்பந்தமாக விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் 25 சதவீத இடஒதுக்கீட்டில், சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளையும் சேர்க்க வேண்டும். சிபிஎஸ்இ பள்ளிகளை சேர்ப்பது குறித்து முடிவெடுக்க மாநில அரசுக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று வாதிட்டார். தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்களை நிர்ணயித்து, அதன் அடிப்படையில், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கான கட்டணத்தை அரசு செலுத்துகிறது.

ஆனால், சிபிஎஸ்இ, ஐசிஎஸ் போன்ற பள்ளிகளுக்கு மாநில அரசின் கட்டண நிர்ணயக் குழு கட்டணங்கள் நிர்ணயிக்க இயலாது. அதனால் இந்த பள்ளிகளை 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் சேர்க்க இயலாது. ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் ஒரு அரசு தொடக்கப் பள்ளியும், மூன்று கிலோ மீட்டர் இடைவெளியில் அரசு நடுநிலைப் பள்ளியும் உள்ளன. தமிழகம் முழுவதும் 5000 பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் உள்ளனர். மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. இதன் காரணமாக அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் விரிவான பதில்மனுவை தாக்கல் செய்யும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 18 ம்தேதிக்கு தள்ளிவைத்தனர்.

The post கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25% இடங்களை ஒதுக்குவதில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க முடியாது: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: