நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், போக்குவரத்து விதி மீறல் மே மாதத்தில் மட்டும் 51,414 வழக்குகள் பதிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்

சென்னை: சென்னை மாநகர காவல் ஆணையர் சார்பில் போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: வாகனங்களில் தடை செய்யப்பட்ட ‘‘சன் கன்ட்ரோல் பிலிம்” ஒட்டப்படுவதை தடுப்பதற்கும் அதனை கண்காணிக்கவும் குழு அமைக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறி இதுபோன்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அந்த வாகனங்களில் இருந்து ‘‘சன் பிலிம் ஸ்டிக்கர்கள்” அகற்றப்படுகிறது. தனியார் வாகனங்களில் மத்திய, மாநில அரசுகளின் சின்னங்களை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த மே மாதம் வரை சென்னை மாநகரில் சன் கன்ட்ரோல் பிலிம் பயன்படுத்தியதாக 6279 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் 31 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று போக்குவரத்து விதி மீறல்கள், நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது தொடர்பாக 51,414 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடி 57 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதில் 18 ஆயிரம் வழக்குகளில் தொடர்புடையவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. விதிமீறல்கள் இருப்பின் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து துறையின் விதிகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நடத்தப்படுகிறது. போக்குவரத்து விதிகள் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஏற்கனவே பிறப்பித்துள்ள உத்தரவுகள் முழுமையாக அமல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

The post நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர், போக்குவரத்து விதி மீறல் மே மாதத்தில் மட்டும் 51,414 வழக்குகள் பதிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: