எந்த உயர்கல்வி சேர்க்கைக்கும் நுழைவுத்தேர்வு கூடாது 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம்: மாநில கல்விக்கொள்கை இறுதி அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு

சென்னை: எந்த உயர்கல்வி சேர்க்கைக்கும் நுழைவுத் தேர்வு கூடாது, 3,5,8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தேவையில்லை, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகள் அடங்கிய மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு முக்கிய அம்சங்கள் நிறைந்த இந்த மாநிலக் கல்விக் கொள்கைக்கான இறுதி அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழுவினர் நேற்று முதலமைச்சரிடம் சமர்ப்பித்துள்ளனர்.

ஒன்றிய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இல்லாமல், மாணவர்களுக்கு அதிக அழுத்தம் கொடுக்கும் விதத்தில் இருந்ததால், தமிழ்நாடு அரசு புதிய கல்விக் கொள்கையை எதிர்த்தது. இதற்கு பதிலாக தமிழ்நாட்டுக்கு என தனி கல்விக் கொள்கையை உருவாக்குவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டது. அதன் அடிப்படையில் 2022 ஜூன் 1ம் தேதி ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் 14 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழு மாநில அரசுக்கான கல்விக் கொள்கையை வடிவமைக்கவும், பரிந்துரைகளை அளிக்கவும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இந்தக் குழுவின் உறுப்பினர்களாக கல்வியியல் எழுத்தாளர் மாடசாமி, மாநிலத் திட்டக்குழு உறுப்பினர்கள் பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில், பேராசிரியர் இராம சீனுவாசன், சவீதா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜவஹர்நேசன், தேசிய கணிதவியல் ஆய்வு நிறுவனத்தின் ஓய்வு பெற்ற கணினி அறிவியல் பேராசிரியர் ராமானுஜம், அகரம் அறக்கட்டளையைச் சேர்ந்த ஜெயஸ்ரீ தாமோதரன், யூனிசெப்பின் முன்னாள் சிறப்புக் கல்வி அலுவலர் அருணா ரத்னம், எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன், சதுரங்க சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த், இசைக் கலைஞர் டி.எம். கிருஷ்ணா, கல்வியாளர் துளசிதாஸ், நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள கிச்சான்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலு ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இந்தநிலையில் அக்குழுவினர் பொதுமக்கள், மாணவர்கள், கல்வி நிபுணர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரிடையே கருத்துக்களை கேட்டு, அக்கருத்துகளின் அடிப்படையில் தமிழகத்திற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மாநில கல்விக் கொள்கைக்கான அறிக்கையை தயார் செய்தனர். தற்போது இந்த அறிக்கை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சுமார் 600 பக்கங்களில் ஆங்கிலத்திலும், 550க்கும் மேற்பட்ட பக்கங்களில் தமிழிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும், 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த தேவையில்லை, கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்பட பல்வேறு பரிந்துரைகளை செய்துள்ளது.

தற்போது முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மாநில கல்விக் கொள்கை இறுதி அறிக்கையின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
* பள்ளிக்கல்வியில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்துவது அவசியம். தொடக்கநிலை வகுப்பு முதல் பல்கலைக்கழக நிலை வரை தமிழ் வழிக் கல்வியை வழங்க வேண்டும்.
* தமிழ் கற்பித்தல், கற்றல் தொடர்பான ஆராய்ச்சி பிரிவை மாநில அரசு கொண்டு வரவேண்டும்.
* 3 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் அவர்களுடைய குடும்பங்களுக்கு சேவை செய்யும் அங்கன்வாடி மையங்களுக்கு ‘’தாய்-குழந்தை பராமரிப்பு மையங்கள்’’ என்று பெயரிட வேண்டும். அங்கு பணிபுரிவோரை தாய்-குழந்தை பராமரிப்பாளர்கள் என்று அழைக்க வேண்டும்.
* மழலையர் குழந்தைகள் பள்ளிகள் குழந்தை மேம்பாட்டு மையங்கள் என அழைக்கப்படும். இந்த மையங்களில் இருக்கும் ஆலோசகர்கள் குழந்தை மேம்பாட்டாளர்கள் என்று அழைக்கப்பட வேண்டும்.
* ‘’ஸ்போக்கன் இங்கிலீஷ்’’ என்பதுடன் ‘’ஸ்போக்கன் தமிழ்’’ என்பதிலும் முதன்மையான கவனம் செலுத்தப்பட வேண்டும்.
* கல்வியாண்டில் ஜூலை 31ம் தேதியன்று 5 வயதை நிறைவு செய்யும் குழந்தைகள் 1ம் வகுப்பில் சேரலாம். அதன்படி, 5+3+2+2 என்ற நிலைகள் பின்பற்றப்பட வேண்டும்.
* தமிழ், கணிதம், அறிவியல் போன்றவற்றுடன் சமூக சமத்துவம் மற்றும் நீதி கருத்தை கொண்ட சமூக கலாசார, பொருளாதார, சுற்றுச்சூழல் மற்றும் தொழில்நுட்ப மாற்றத்தை செயல்படுத்தும் பாடத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். பாடத்திட்டம் தனிப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையுடன் தேவையான தொடர்புகளை ஏற்படுத்த வேண்டும். சமூகம் எதிர்கொள்ளும் பிரச்னைகள், அதை நிவர்த்தி செய்வது எவ்வாறு என்பது தொடர்பான அறிவாற்றலை உருவாக்குவதை நோக்கமாக கொண்டிருக்க வேண்டும்.
* மனப்பாடம் செய்வதற்கான தேவையை நீக்கி, மாணவர்கள் தங்கள் அறிவாற்றலை பிரதிபலிக்கவும், அதனைப் பயன்படுத்தவும் அனுமதிக்க வேண்டும். அதேபோல் புத்தகத்தின் உதவியுடன் தேர்வு எழுதும் நடைமுறையை தொடரலாம்.
* ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்) புத்தக கற்றலை மட்டும் கொண்டிராமல், கலை மற்றும் அறிவியலுக்காக ஆரோக்கியமான அணுகுமுறை, சமூக மற்றும் ஜனநாயக கோட்பாடுகளை பற்றிய புரிதல், சாதி, பாலினம், மொழி, கலாசாரம், உள்ளூர் அறிவு ஆகியவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
* ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று ஆசிரியர் காலிப்பணியிடத்துக்கு விண்ணப்பிக்கும் தேர்வரை, பல மதிப்பீட்டு முறைகளை கொண்டு கடுமையான தேர்வு செயல்முறையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.
* பள்ளிகள், கல்லூரிகளுக்கு இணையாக தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களால் நடத்தப்படும் அனைத்து பயிற்சி மையங்களையும் தடை செய்ய அரசு பரிசீலிக்க வேண்டும். இந்த பயிற்சி மையங்கள் அரசாங்கத்தின் எந்தவொரு ஒழுங்குமுறை அமைப்பின் கீழும் வரவில்லை. எனவே உரிய அதிகாரங்களை கொண்ட ஒருங்குமுறை குழுவை இதற்கென அரசு உருவாக்கி உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
* ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க விரும்பும் பெற்றோரிடம் தனியார் கல்வி நிறுவனங்கள் பணம் பறிப்பதை தவிர்க்க அதற்கான கட்டண கட்டமைப்பை கண்காணிக்க வேண்டும்.
* தனியார் சுயநிதி பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாடு கட்டணக் குழுவின் அதிகாரங்கள் மாநிலத்தில் நிறுவப்பட்டு இயங்கும் அனைத்து சி.பி.எஸ்.இ. மற்றும் பிற வாரிய பள்ளிகளுக்கும் விரிவுப்படுத்தப்பட வேண்டும்.
* அரசுப் பள்ளிகளில் உள்ளது போல பள்ளி மேலாண்மைக் குழுவை தனியார் பள்ளிகளிலும் அமைக்கலாம். ஆனால் அவை தனியார் பள்ளிகளின் நிர்வாகத்தில் தலையிடக் கூடாது.
* 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச சைக்கிள் திட்டத்தை 9-ம் வகுப்பில் இருந்து நீட்டிக்கலாம். அதேபோல், 10ம் வகுப்பு வரையில் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்படும் அரசின் அனைத்து உதவிகளையும், 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கும் விரிவுப்படுத்த அரசு பரிசீலிக்கலாம்.
* 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் பெற்ற ஒருங்கிணைக்கப்பட்ட மதிப்பெண்களை கொண்டே உயர்கல்வியில் அனைத்து படிப்புகளிலும் மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும். எந்த உயர்கல்வி படிப்புகளுக்கான சேர்க்கைக்கும் எந்த நுழைவுத்தேர்வையும் ஏற்க முடியாது.
* 3 ஆண்டு இளங்கலை, 2 ஆண்டு முதுகலை படிப்புக்கான திட்டங்கள் தொடரும். பல்கலைக்கழக மானியக்குழுவின் பாடத்திட்ட கட்டமைப்பில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, 4 ஆண்டு இளங்கலை திட்டங்களில் தொடர மாணவர்களுக்கு கூடுதல் விருப்பத்துடன் நீட்டிக்கலாம்.
* உயர்கல்வியில் அரசின் பங்களிப்பு குறைவாக இருக்கிறது. இன்ஜினியரிங், தொழில்நுட்பம், மருத்துவம் போன்ற தொழில்முறை படிப்புகளில் தனியார் பங்களிப்பு ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. எனவே உயர்கல்வியை தனியார் மயமாக்குவதையும், வணிகமயமாக்குவதையும் தடுக்கும் வகையில், உயர்கல்வியில் அரசு அதிக முதலீடு செய்து தமிழகம் முழுவதும் நிறுவனங்களை நிறுவ முன்வர வேண்டும்.
* தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகத்துக்கு சொந்தமாக பன்னோக்கு சிறப்பு மருத்துவமனை மற்றும் கல்லூரி இருக்க வேண்டும்.

* தேர்வு என்பது ஒரு மாணவருக்கு என்ன தெரியும், என்ன தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கான நோக்கத்தை அளவிடுவதாக கருதப்பட வேண்டும்.
* வாரியத் தேர்வுகளுக்கு சீர்திருத்தம் தேவைப்படுகிறது. மாணவ-மாணவிகளின் மன அழுத்தத்தை குறைப்பது தேர்வுகளின் முக்கிய முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
* உடற்கல்வி பாடம் நிலையான பாடத்திட்ட நடவடிக்கையாக இருக்க வேண்டும். உடற்கல்வி வகுப்புகள் வாரத்துக்கு 2 முதல் 4 பாடவேளைகளுக்கு விரிவுப்படுத்த வேண்டும்.
* தொழில்நுட்பம் பற்றிய ஆரோக்கியமான அணுகுமுறையை மாணவர்களுக்கு வழங்குவது பள்ளிக்கல்வியின் முக்கிய குறிக்கோளாக இருக்க வேண்டும்.
* ஆசிரியர்கள் தேர்வு முறையை சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசித்து மேம்படுத்தலாம்.
* பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு என்பது நடத்தக் கூடாது.

The post எந்த உயர்கல்வி சேர்க்கைக்கும் நுழைவுத்தேர்வு கூடாது 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம்: மாநில கல்விக்கொள்கை இறுதி அறிக்கை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு appeared first on Dinakaran.

Related Stories: