விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல்

சென்னை: தமிழக அரசின் பத்திரப்பதிவு துறை கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி நிர்ணயம் செய்த வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில், முத்திரைத்தாள் கட்டணம், பதிவு கட்டணம் ஆகியவற்றை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கிறது. இந்த வழிகாட்டி மதிப்பில் பல்வேறு முரண்கள் இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனால் அதனை சரிப்படுத்தும் விதமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் துணைக் குழுக்களை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவினர் தங்கள் மாவட்டத்தில் உள்ள பகுதிகளுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்புகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறைகளை களைய முயற்சி எடுத்தனர்.

இந்த திருத்தப்பட்ட வழிகாட்டி மதிப்பின் வரைவு பட்டியல் கடந்த ஜூன் 10ம் தேதி பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. பின்னர் பொதுமக்களிடம் இரு்ந்து வரப்பட்ட ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை ஆட்சியர் தலைமையிலான குழுக்கள் ஆய்வு செய்தன. அதில் தகுதியானவை ஏற்றுக் கொள்ளப்பட்டு வரைவு வழிகாட்டி மதிப்பு பட்டியலில் திருத்தம் செய்யப்பட்டு புதிய பட்டியல் தயார் செய்யப்பட்டன. இந்த திருத்தம் செய்யப்பட்ட வழிகாட்டி மதிப்பிற்கு பத்திரப்பதிவுத் துறை தலைவர் தினேஷ், கடந்த 29ம் தேதி ஒப்புதல் அளித்தார்.

இந்த புதிய வழிகாட்டி மதிப்பை பொருத்தவரை கிராமப்புறங்களில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் நகர்ப்புறங்களில் சில இடங்களில் மட்டும் 10 சதவீதம் அதிகரித்தும், குறைத்தும் மதிப்புகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் புதிய வழிகாட்டி மதிப்பை இன்றுமுதல் (திங்கட்கிழமை) நடைமுறைப்படுத்த பத்திரப்பதிவு துறை முடிவு செய்தது. அதற்காக பத்திரப்பதிவு துறையின் இணையதளத்தில் நேற்று இரவு புதிய வழிகாட்டி மதிப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்நிலையில் தமிழக அரசு உத்தரவுப்படி, பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை கூறியிருப்பதாவது: இன்று முதல் பத்திரப்பதிவு செய்பவர்கள் புதிய வழிகாட்டி மதிப்பின் அடிப்படையில் மட்டுமே பதிவு செய்ய முடியும். ஏற்கனவே ஆவணங்களை பதிவு செய்ய இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இருந்தால், அவர்கள் தற்போதைய மதிப்பின் அடிப்படையில் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். வழிகாட்டி மதிப்பு குறைந்து இருந்தால், அந்த தொகை திரும்பத் தரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இடைத்தேர்தல் நடைபெறும் விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இந்த புதிய சந்தை மதிப்பு வழிகாட்டி அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post விக்கிரவாண்டி தொகுதி நீங்கலாக தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு அமல் appeared first on Dinakaran.

Related Stories: