சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி நிறைவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு: அரசாணை வெளியீடு

சென்னை: தமிழக அரசின் ஒருங்கிணைந்த கட்டிட விதிகளின் அடிப்படையில் தற்போது கட்டிட அனுமதி வழங்கப்படுகின்றன. மேலும், கட்டி முடிக்கப்பட்ட கட்டிடத்துக்கு பணி முடிப்பு சான்றிதழ் பெற்றால்தான் மின்சாரம், குடிநீர், கழிவுநீர் இணைப்புபெற முடியும். இந்த விதிகளை திருத்த வேண்டும் என்று கட்டுமான நிறுவனங்கள் கோரி வந்தன. இதுதொடர்பாக மானியக் கோரிக்கை விவாதத்தில் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் முத்துசாமி, 300 சதுர மீட்டருக்குள் கட்டிட பரப்பளவு கொண்ட 14 மீட்டர் உயரத்திற்குள் உள்ள அனைத்து வணிக கட்டிடங்களுக்கும் கட்டிட முடிவு சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவித்திருந்தார். தற்போது அதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.

அதில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் 2019ல் திருத்தம் செய்து 300 சதுர மீட்டர் பரப்பளவில், 14 மீட்டருக்கு மிகாமல் கட்டப்பட்ட வணிகக் கட்டடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இந்த சட்ட திருத்தம் செய்வதற்கு முன் சிறு வணிக உரிமையாளர்கள் தண்ணீர், கழிவுநீர் மற்றும் மின்சார இணைப்புகளைப் பெறுவதற்கு பணிநிறைவுச் சான்றிதழ் கட்டாயமாக இருந்தது. இந்நிலை தற்போது மாற்றப்பட்டுள்ளது.

சமீபத்தில், மாநிலம் முழுவதும் 750 சதுர மீட்டருக்கும் குறைவான 8 குடியிருப்பு அலகுகளைக் கொண்ட குடியிருப்பு கட்டிடங்களுக்கு பணிநிறைவுச் சான்றிதழ் பெறும் விதிமுறைகளைத் நகர்ப்புற வீட்டுவசதித்துறை சார்பில் தளர்த்தப்பட்டன. தற்போது ‘‘சிறிய வணிகர்கள் பயன்பெறும் வகையில், 300 சதுர மீட்டருக்கும் குறைவான, 14 மீட்டர் உயரமுள்ள வணிக கட்டடங்களுக்கு பணிநிறைவு சான்றிதழில் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது’’. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிறிய வகை கட்டிடங்களுக்கான பணி நிறைவுச்சான்று பெறுவதில் இருந்து விலக்கு: அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: