போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்; 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு

மும்பை: மும்பையில் போலி பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை நடத்திய நிலையில், 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் செயல்பட்டு வரும் இரண்டு பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் (பிஎஸ்கே) லஞ்சம் வசூலிப்பதாக புகார்கள் வந்தன. அதையடுத்து மும்பை, நாசிக்கில் 33 இடங்களில் மத்திய புலனாய்வுப் பிரிவு (சிபிஐ) அதிரடி சோதனை நடத்தியது. பாஸ்போர்ட் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டு ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் ஆதாரங்கள் சிபிஐ மீட்டுள்ளது.

இதுகுறித்து சிபிஐ வட்டாரங்கள் கூறுகையில், ‘மும்பையில் இருக்கும் பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தின் கீழ் பணிபுரியும் இரண்டு பாஸ்போர்ட் சேவா கேந்திராக்களில் இருக்கும் அதிகாரிகள் உதவியுடன் பாஸ்போர்ட் வழங்குவதில் பல முறைகேடுகளை செய்து வந்தனர். அவர்களின் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை கணக்குகள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்து சம்பந்தப்பட்ட நபர்களின் இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதாவது 14 அதிகாரிகள், 18 பாஸ்போர்ட் வசதி முகவர்கள் உட்பட 32 பேர் மீது 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி ஆவணங்களின் அடிப்படையில் பாஸ்போர்ட் வழங்கி உள்ளனர். இதற்காக அவர்கள் பல லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றனர். அதையடுத்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, தொடர் விசாரணைகள் நடந்து வருகிறது’ என்றன.

The post போலி பாஸ்போர்ட் வழங்கிய விவகாரம்; 33 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 32 அதிகாரிகள், முகவர்கள் மீது 12 வழக்கு appeared first on Dinakaran.

Related Stories: