கடலூர்: ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு கடலூர் மாவட்டத்துக்கு ஜனவரி 3ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. இக்கோயிலில் மார்கழி மாதத்தில் ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சனம் ஆகிய இருபெரும் தரிசன விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் சுவாமி வீதி உலா நிகழ்வுகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற உள்ளன. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆருத்ரா தரிசனம், வரும் ஜனவரி 3 ஆம் தேதி மாலை 3 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. இதனால், கடலூர் மாவட்டத்துக்கு வரும் ஜன. 3 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையானது கடலூர் மாவட்டத்தில் உள்ள தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
அனைத்து துணை கருவூலங்கள், மாவட்ட கருவூலம் ஆகியவை குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களைக் கொண்டு வழக்கம்போல இயங்கும். மேலும், இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை (பிப்ரவரி 14) பணி நாளாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
