திருவாரூரில் தனியார் மருத்துவமனையில் கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

திருவாரூர்,டிச.16: திருவாரூரில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண் இறந்தது தொடர்பாக தனியார் மருத்துவமனை மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் தாலுககா மேல ராதாநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் ஜீவானந்தம் (35). கூலி தொழிலாளி. இவருக்கு ராஜகுமாரி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்று 7 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் 2வதாக ராஜகுமாரி கர்ப்பமானார்.

அதன்படி 4 மாத கர்ப்பிணியாக இருந்து வந்த ராஜகுமாரி திருவாரூர் வடக்கு வீதியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனை ஒன்றின் பெண் மருத்துவர் ஒருவர் மூலம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். திடீரென சில நாட்களில் வயிற்று வலி அதிகமாகவே சம்பந்தப்பட்ட மருத்துவமனை மருத்துவரிடம் கடந்த 7ந்தேதி காண்பித்தபோது மருத்துவரின் சோதனையில் ராஜகுமாரி வயிற்றில் வளரும் கரு இரட்டை கரு என்றும் அது கர்ப்பப்பையில் வளராமல் கர்ப்பபை அருகே இருந்து வரும் டியூப் ஒன்றில் வளர்ந்து வருவதாகவும் உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் குழந்தையை அகற்ற வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது. மறுநாள் 8ந்தேதி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு ரூ.52 ஆயிரம் கட்டணத் தொகை செலுத்தியதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து 6 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் கடந்த 13ந் தேதி மாலை சிகிச்சைக்கு உரிய கருவிகள் தங்களிடம் போதுமான அளவில் இல்லை என்றும் எனவே அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பதாகவும் அங்கு சிகிச்சைக்கு செல்லுமாறு தனியார் மருத்துவமனையின் பெண் மருத்துவர் தெரிவித்து இதற்காக மருத்துவமனை சார்பிலேயே தனியார் ஆம்புலன்ஸ் ஒன்றையும் பிடித்த கொடுத்து மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த ராஜகுமாரி நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில் தனியார் மருத்துவமனையில் பெண் மருத்துவர் உரிய சிகிச்சை அளிக்காததால் தான் மனைவி இறந்ததாகவும் எனவே பெண் மருத்துவர் மீதும்தனியார் மருத்துவமனை மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜீவானந்தம் நேற்று திருவாரூர் டவுன் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: