சென்னை: சட்டப்பேரவையில் நேற்று பொன்னேரி துரை சந்திரசேகர் (காங்கிரஸ்) செய்தி மற்றும் விளம்பரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசியதாவது: ஊருக்கே தண்ணீர் கொடுக்கும் எங்கள் பொன்னேரி தொகுதி. கடல் நீரை குடியராக்கி எல்லோருக்கும் கொடுக்கின்ற நாங்கள் காலம் காலமாக உப்பு தண்ணீரை குடித்துக் கொண்டிருக்கிறோம். அரசு இதற்கு ஒரு பதிலை கொடுக்க வேண்டும். வல்லூர் அனல் மின் நிலையம் மின்சாரம் தயாரிக்கும் எங்களுக்கு அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. தமிழக முதல்வர் இந்த பிரச்னையை கவனத்தில் எடுத்துக் கொண்டு, பொன்னேரி மீஞ்சூர் பகுதிக்கு மின்தடை ஏற்படாதவாறு பார்க்க வேண்டும். சுப்ரீம் கோர்ட்டின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்.
சட்டத்துறை அமைச்சர் ரகுபதி: உச்ச நீதிமன்றத்தின் கிளையை டெல்லிக்கு வெளியே கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வை டெல்லியில் அமைக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கும், பிரதமருக்கும் கடந்த 2022ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பதில் அளித்த மத்திய சட்ட மந்திரி, உச்ச நீதிமன்றத்தின் கிளையை நாட்டின் பல்வேறு பகுதியில் அமைக்க வேண்டும் என்றும், அரசியல் சாசன அமர்வை டெல்லியில் அமைக்க வேண்டும் என்றும் பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் உள்ளது. அதில் வரும் தீர்ப்பை பொறுத்துதான் முடிவு செய்ய முடியும். காத்திருக்கிறோம் தீர்ப்புக்கு பிறகு மத்த விஷயங்கள் முடிவு செய்யப்படும். இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
The post ஊருக்கே நல்ல தண்ணீர் கொடுக்கும் பொன்னேரி தொகுதி மக்கள் உப்பு தண்ணீரை குடிக்கிறார்கள்: பேரவையில் காங்கிரஸ் எம்எல்ஏ வேதனை appeared first on Dinakaran.