18 ஆண்டுக்குப்பின் தேரோட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நேரில் நன்றி

சென்னை: கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயிலில் 18 ஆண்டுகளுக்கு பின் தேரோட்டம் நடந்த நிலையில், அப்பகுதி கிராம மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில், இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிவகங்கை தேவஸ்தானத்தால் நிர்வகிக்கப்படும் கோயில். இந்த கோயிலில், சட்டம் ஒழுங்கு மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக 2006 முதல் 2023 வரை தேரோட்டம் நடைபெறவில்லை. தேர்த் திருவிழா நடத்தப்படாதது பக்தர்களிடையே ஏமாற்றத்தையும், அதிருப்தியையும் ஏற்படுத்தி வந்தது. இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசின் சீரிய நடவடிக்கை காரணமாக, 18 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா கடந்த 21ம்தேதி சிறப்பாக நடந்தது. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை மூலம் நடத்தப்பட்ட விழாவில் லட்சக்கணக்கான மக்கள் பங்கு பெற்று மகிழ்ந்தனர். இதையொட்டி அப்பகுதி முக்கிய பிரமுகர்கள் மற்றும் கிராம மக்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து நன்றி தெரிவித்தனர். அப்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் உடனிருந்தார்.

The post 18 ஆண்டுக்குப்பின் தேரோட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம மக்கள் நேரில் நன்றி appeared first on Dinakaran.

Related Stories: