மதுரையில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக விமானத்தில் பறந்து வந்த அரசு பள்ளி மாணவர்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையை நேரில் பார்த்து மகிழ்ந்தனர்

சென்னை: மதுரையில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக விமானத்தில் பறந்து வந்த அரசுப்பள்ளி மாணவ, மாணவிகள் சட்டமன்ற பேரவையை நேரில் பார்த்து மகிழ்ந்தனர். மதுரையில் உள்ள மாநகராட்சி பள்ளிகளின் மாணவ மாணவிகள் 9 பேர், அரசுப்பள்ளி மாணவி ஒருவர் என்று 10 மாணவ மாணவிகளை, தனியார் தொண்டு நிறுவனம் தேர்வு செய்து, நேற்று காலை மதுரையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து வந்தது. மதுரையிலிருந்து உற்சாகமாக விமானத்தில் பயணம் செய்து சென்னை வந்த மாணவ மாணவிகளை, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் வரவேற்று, அவர்களை மெட்ரோ ரெயில் மூலம், சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை சட்டமன்ற வளாகத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் சட்டமன்ற கூட்டத் தொடரை கண்டுகளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

முன்னதாக சென்னை விமான நிலையம் வந்தடைந்த மாணவ, மாணவிகள் உற்சாகமாக பேட்டி அளித்தனர். அவர்கள் கூறுகையில், வீட்டு வாசலில் நின்று வானத்தில் பறந்து செல்லும் விமானத்தைப் பார்க்கும் எங்களுக்கு இந்த ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது என்றனர். இதுகுறித்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறும்போது, 9 மதுரை மாநகராட்சிப்பள்ளி, ஒரு அரசுப்பள்ளியைச் சேர்ந்த 10 பேரை ரேண்டம் முறையில் தேர்வு செய்தோம். அரசுப்பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க இதுபோல் பல்வேறு செயலில் தொடர்ந்து ஈடுபடுவோம் என்றனர்.

The post மதுரையில் இருந்து சென்னைக்கு முதல்முறையாக விமானத்தில் பறந்து வந்த அரசு பள்ளி மாணவர்கள்: தமிழ்நாடு சட்டப்பேரவையை நேரில் பார்த்து மகிழ்ந்தனர் appeared first on Dinakaran.

Related Stories: