திருப்பதியில் பிரமோற்சவம் 6ம் நாளில் கோலாகலம்: கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி

திருமலை: திருப்பதி அடுத்த அப்பலாயகுண்டாவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் பிரமோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பிரமோற்சவத்திற்கு அனைத்து தெய்வங்களையும் அழைக்கும் விதமாக மிதுன லக்னத்தில் வைகானச ஆகம முறைப்படி வேத பண்டிதர்களின் வேத முழக்கங்கள், மங்கள வாத்தியங்கள் இசைக்க, பக்தர்களின் கோவிந்த முழக்கத்திற்கு மத்தியில் கங்கணப்பட்டர் சூர்யகுமார் தலைமையில் கொடியேற்றம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து சுவாமி, தாயாருக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள் மற்றும் சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, மாலை ஊஞ்சல்சேவையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை பெரிய சேஷ வாகனத்தில் சுவாமி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் ெதாடர்ச்சியாக பிரமோற்சவத்தின் 2ம் நாளால் காலை 8 மணிக்கு 5 தலை சின்னசேஷம் (வாசகி எனும் ) பாம்பை வாகனமாக கொண்டு வாகனத்தில் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதனை தொடர்ந்து மாலை ஊஞ்சல்சேவையும், இரவு அன்ன வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பிரமோற்சவத்தின் மூன்றாம் நாளில் காலை 8 மணிக்கு யோக நரசிம்ம சுவாமி அலங்காரத்தில் சிம்ம வாகனத்தில் நான்கு மாடவீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். மங்கள நாதஸ்வர வாத்திய இசை, பக்தர்கள் பஜனைகள், கோலாட்டங்களுடன் மாட வீதிகளில் வாகனசேவை நடைபெற்றது. வீதி உலாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் வாரி சேவா தன்னார்வலர்கள் மூலம் பால், மோர் பிரசாதம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாலை ஊஞ்சல் சேவையும், இரவு முத்துபந்தல் வாகனத்தில் தேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பிரமோற்சவத்தின் நான்காம் நாளில் ஸ்ரீராஜமன்னார் அலங்காரத்தில் கற்பக விருட்ச வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பக்தர்கள் வழிநெடுகிலும் கற்பூரம் ஏற்றி சுவாமியை வழிப்பட்டனர். சுவாமி, தாயாருக்கு பால், தயிர், தேன், சந்தனம், மஞ்சள், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பின் மாலை கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி சர்வ பூபால வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதையடுத்து பிரமோற்சவத்தில் 5ம் நாளான நேற்றுமுன்தினம் காலை மோகினி அலங்காரத்தில் பல்லக்கிலும், இரவு கருட வாகனத்திலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன்தொடர்ச்சியாக பிரமோற்சவத்தின் ஆறாம் நாளான நேற்று காலை 7 மணிக்கு அனுமந்த வாகனத்தில் கோதண்ட ராமர் வடிவில் பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி எழுந்தருளி காட்சியளித்தார். மாலை புண்யாஹவச்சனம், வசந்த உற்சவமும். இரவு கஜ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். வாகன சேவையில் ஏ.இ.ஓ ரமேஷ், கண்காணிப்பாளர் ஸ்ரீவாணி, கங்கண பட்டர் சூர்ய குமார் ஆச்சார்யா, கோவில் ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post திருப்பதியில் பிரமோற்சவம் 6ம் நாளில் கோலாகலம்: கோதண்டராமர் அலங்காரத்தில் எழுந்தருளிய பிரசன்ன வெங்கடேஸ்வர சுவாமி appeared first on Dinakaran.

Related Stories: