6 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 700 எம்எல்டி குடிநீர் வழங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல்

சென்னை: தமிழக சட்டப் பேரவையில் நேற்று நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்து பேசியதாவது: தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கான ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டம் இரண்டாம் பகுதி, புதுக்கோட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கான 6 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் 94 லட்சம் மக்களுக்கு 700 எம்எல்டி குடிநீர் வழங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட அனைத்து குடிநீர் திட்டங்ளும் முடிவுறும் போது தமிழ்நாடு முழுவதும் உள்ள சுமார் 8 கோடி மக்களுக்கு 5000 எம்எல்டி பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க இயலும். வடசென்னை வளர்ச்சிக்கு ரூ.946 கோடி: சென்னை பெருநகரில் வசிக்கும் சுமார் 89 லட்சம் மக்களுக்கு நாளொன்றுக்கு 1065 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட பகுதிகளில் 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.545 கோடி மதிப்பீட்டிலான குடிநீர் பணிகள் முடிக்கப்பட்டு முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது. மேலும், செம்மஞ்சேரி மற்றும் நீலாங்கரை பகுதிகளுக்கு ரூ.127 கோடி மதிப்பீட்டில் குடிநீர் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், கொருக்குப்பேட்டை, கொரட்டூர் மற்றும் ராஜிவ்காந்தி சாலை ஆகிய பகுதிகளில் ரூ.126.27 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னைக்கு அருகிலுள்ள நெம்மேலியில் சுமார் 9 லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில் நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிப்பு திறன் கொண்ட கடல் நீரை குடிநீராக்கும் நிலையம், பேரூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட மற்றொரு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. அனைத்து குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் குடிநீர் பகிர்மான நிலையங்களில், ரூ.50 கோடி மதிப்பீட்டில், ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

ஆலந்தூர், ஆயிரம் விளக்கு மற்றும் கே.கே.நகரில் மொத்தம் ரூ.221 கோடி மதிப்பீட்டில் பழுதடைந்துள்ள கழிவுநீர் கட்டமைப்புகளை சீரமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னை மாநகருடன் இணைக்கப்பட்ட 42 உள்ளாட்சி அமைப்புகளில் மூன்றில் கழிவுநீர் கட்டமைப்பு பணிகள் ரூ.143 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எஞ்சிய பகுதிகளிலும் மற்றும் மாதவரத்தில் விடுப்பட்ட பகுதிகளிலும் ரூ.3161 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. சென்னையில் உள்ள நீர்வழித்தடங்களில் கழிவுநீர் கலப்பதை தடுப்பதற்காக ரூ.50 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.946 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

The post 6 கூட்டுக்குடிநீர் திட்டங்கள் மூலம் 700 எம்எல்டி குடிநீர் வழங்க விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு: அமைச்சர் கே.என்.நேரு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: