வயநாட்டில் பிரியங்காவை ஆதரித்து மம்தா பானர்ஜி பரப்புரை: பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பதாக தகவல்

கொல்கத்தா: வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் களமிறங்கும் பிரியங்கா காந்தியை ஆதரித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பரப்புரை மேற்கொள்ள உள்ளார். மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி, கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இரு தொகுதிகளில் வென்ற ராகுல், தேர்தல் முடிவுகள் வெளியான கடந்த 4ம் தேதியிலிருந்து 14 நாள்களுக்குள் (ஜூன் 18) ஏதேனும் ஒரு தொகுதியின் எம்பி பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது கட்டாயம் ஏற்பட்டது.

இதையடுத்து வயநாடு தொகுதி எம்பி பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். அவரது ராஜினாமாவை மக்களவை செயலகம் ஏற்றுக் கொண்டது. இதனிடையே ராகுல் காந்தியின் ராஜினாமாவால் காலியான வயநாடு மக்களவை தொகுதியில் அவரது சகோதரியும் கட்சியின் பொதுச்செயலாளருமான பிரியங்கா காந்தியை களமிறக்க காங்கிரஸ் முடிவு செய்தது. இதற்கான ஏற்பாடுகளை காங்கிரஸ் மேலிடம் செய்து வருகிறது. இந்நிலையில் பிரியங்கா காந்தியை ஆதரித்து வயநாடு தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சகருமான மம்தா பானர்ஜி தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக திரிணாமுல் வட்டார தகவல்கள் கூறுகின்றன.

கடந்த 20ம் தேதி கொல்கத்தாவில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரமுடனான சந்திப்பின் போது வயநாட்டில் பிரியங்காவை ஆதரித்து மம்தா ஒப்புதல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. 2024 மக்களவை தேர்தலில் வாரணாசியில் பிரதமர் மோடியை எதிர்த்து பிரியங்கா காந்தி போட்டியிட வேண்டும் என்று மம்தா வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

The post வயநாட்டில் பிரியங்காவை ஆதரித்து மம்தா பானர்ஜி பரப்புரை: பல்வேறு பிரச்சார கூட்டங்களில் பங்கேற்பதாக தகவல் appeared first on Dinakaran.

Related Stories: