இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்: அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் விக்கிரமசிங்கே திறந்து வைத்தனர்

கொழும்பு: இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கடல் சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தை வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோர் கூட்டாக திறந்து வைத்தனர். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு நாள் பயணமாக நேற்று இலங்கைக்கு சென்றார்.கொழும்பு விமான நிலையத்தில் அவரை அந்நாட்டின் வெளியுறவு இணை அமைச்சர் தாரக பாலசூரிய, கிழக்கு மாகாண ஆளுனர் எஸ்.தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.

பிரதமர் மோடி தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெய்சங்கர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இதுவாகும். அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேவை அதிபர் மாளிகையில் சந்தித்து பேசினார். இது தொடர்பாக அதிபர் மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் 106 வீடுகளை அதிபர் விக்ரமசிங்கே மற்றும் ஜெய்சங்கர் கூட்டாக இணைந்து காணொலி வாயிலாக திறந்துவைத்தனர்.

மேலும் ரூ.50 கோடியில் இந்திய நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தையும் காணொலி வாயிலாக திறந்து வைத்தனர். இதில், கொழும்பில் உள்ள கடற்படைத் தலைமையகத்தில் ஒரு மையம், ஹம்பாந்தோட்டையில் துணை மையம், காலி, அருகம்பே, மட்டக்களப்பு, திருகோணமலை, கல்லாறு, பருத்தித்துறை, மொல்லிக்குளம் ஆகிய இடங்களில் உள்ள கட்டுப்பாட்டு மையங்கள் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபருடனான சந்திப்பிற்கு பிறகு பிரதமர் தினேஷ் குணவர்த்தனேவையும் அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.

The post இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையம்: அமைச்சர் ஜெய்சங்கர், அதிபர் விக்கிரமசிங்கே திறந்து வைத்தனர் appeared first on Dinakaran.

Related Stories: