மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி

சென்னை: விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக பணியாற்றி வந்த அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் அப்பொறுப்பிலிருந்து கடந்த 11ம் தேதி விடுவிக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக டாக்டர் ப.சேகர், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் விழுப்புரம் வடக்கு மாவட்டத்திற்கான அவைத் தலைவர் பதவிக்கு உள்கட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் அமைச்சர் செஞ்சி மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுகவின் 15வது பொதுத் தேர்தலில், விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட டாக்டர் ப.சேகர் மாவட்ட திமுக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த காரணத்தால் விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கான தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, இப்பொறுப்புக்கு போட்டியிடுவோர் அதற்கென உள்ள படிவத்தில் முறைப்படி பூர்த்தி செய்து ஜூன் 17ம் தேதி அன்று ரூ.25000 வீதம் தலைமைக் கழகத்தில் அளித்து ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் என தலைமைக் கழகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவர் பொறுப்புக்கு செஞ்சி கே.எஸ்.மஸ்தான் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்திருந்த காரணத்தால், அவரது மனு ஏற்கப்பட்டு, விழுப்புரம் வடக்கு மாவட்டம், மாவட்ட அவைத்தலைவராக செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட அமைச்சர் செஞ்சி மஸ்தானுக்கு திமுகவில் புதிய பதவி appeared first on Dinakaran.

Related Stories: