திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு: மர்ம நபருக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு கிராமத்தில் அமைந்துள்ளது ஸ்ரீ தீப்பாஞ்சி அம்மன் கோயில். இந்த கோயிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு உண்டியலில் காணிக்கை செலுத்துவது வழக்கம். நேற்று இரவு மர்ம நபர்கள், கோயில் சுற்றுச்சுவர் மீது ஏறி உள்ளே குதித்த, உண்டியலை உடைத்து, அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கோயிலுக்கு வந்து பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு இருப்பது தெரிந்து, புல்லரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்தனர். மேலும் கோயிலில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர், அதில் கோயில் கேட் ஏறி உள்ளே குதித்த மர்ம நபர் கோயிலில் வைத்திருந்த கடப்பாறையால் முதலில் அம்மன் வைத்திருக்கும் அறையின் கிரில் கேட்டை உடைக்க முயற்சித்து அது முடியாததால் கோயில் உண்டியலை உடைத்து அதிலிருந்து பணத்தை அள்ளிச் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

இந்த உண்டியலில் கிட்டத்தட்ட ரூ.1 லட்சம் வரை காணிக்கையாக வந்திருக்கும் என கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். இதனையடுத்து சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கோயில் உண்டியலை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்ம நபரை புல்லரம்பாக்கம் போலீசார் தேடி வருகின்றனர்.

இதேபோல் திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆசூரி தெருவில் நாகலிங்கம் ஸ்டோர் என்ற மளிகை கடையின் பூட்டை உடைத்து கடையிலிருந்து ரூ.4 ஆயிரம் திருடு போயுள்ளது. அதே தெருவில் உள்ள முருகன் ஸ்டோர் என்ற மளிகை கடையின் பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். ஆனால் அங்கு பணம் எதுவும் திருடு போகவில்லை என அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.  ஒரே நாளில் மளிகைக் கடைகளின் பூட்டை உடைத்தும், கோயில் உண்டியலை உடைத்தும் கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு: மர்ம நபருக்கு வலை appeared first on Dinakaran.

Related Stories: