வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்களை தேர்தலில் பயன்படுத்தக்கூடாது என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார். நாடு முழுவதும் 18வது மக்களவை தேர்தல் தற்போது நடந்து முடிந்தது. இதில் மின்னணு இயந்திரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. இந்தநிலையில் போர்டோரிகா நாட்டில் இவிஎம் வழியாக நடந்த தேர்தலில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதால், மின்னணு இயந்திரங்களை இனிமேல் தேர்தலுக்கு பயன்படுத்த வேண்டாம் என்று டிவிட்டர், டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்தார். இதையடுத்து இந்தியாவிலும் மின்னணு இயந்திரங்கள் தொடர்பான விவாதங்கள் எழுந்துள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மை குறித்து கேள்விகளை எழுப்பிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இவிஎம்களின் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை பயன்படுத்துவதை ரத்து செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டார்.

இதுதொடர்பாக அவர் தனது டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் கருப்பு பெட்டி. எனவே நமது தேர்தல் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை குறித்து தீவிர கவலைகள் எழுப்பப்பட்டு வருகிறது. அதை யாரும் ஆய்வு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. ஜனநாயக நாட்டில் அரசு நிறுவனங்கள் கைப்பற்றப்படும்போது, ​​பொது மக்களுக்கு வெளிப்படையான தேர்தல் செயல்முறைகளில் மட்டுமே பாதுகாப்பு உள்ளது. எனவே மின்னணு இயந்திரங்கள் மற்றும் செயல்முறைகளின் முழுமையான வெளிப்படைத்தன்மையை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும் அல்லது அவற்றை தேர்தலில் பயன்படுத்துவதில் இருந்து ஒதுக்கி வைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். மூத்த காங்கிரஸ் தலைவர் கவுரவ் கோகோய் கூறுகையில்,’ மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தவறு செய்ய முடியாதவை என்று கருதும் முன், தேர்தல் முழுவதும் எத்தனை மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுதடைந்தன என்பது குறித்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். பொது மக்களுக்குத் தெரிந்துகொள்ளும் உரிமை இருப்பதால், தேர்தல் ஆணையம் இந்த தகவல்களை வெளியிடும் என்று நம்புகிறேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

The post வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த முடியாவிட்டால் மின்னணு இயந்திரங்கள் வேண்டாம்: தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: