பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம்


அண்ணாநகர்: பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிக் கொல்ல முயன்ற வழக்கில், 7 பேரை போலீசார் கைது செய்தனர். திருமங்கலத்தில் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கொலைக்கு பழிதீர்க்க அவரை வெட்டியதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் நதியா. பாஜ மகளிர் அணி மாநில பொதுச் செயலாளர். இவரது கணவர் சீனிவாசன், கடந்த 15ம் தேதி, அதே பகுதியில் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, ஆட்டோவில் வந்த 6 பேர், இவரை வழிமறித்து ஓட ஓட விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதில், படுகாயமடைந்த சீனிவாசன், அண்ணாநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திருமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிய மர்ம நபர்களை தேடி வந்தனர். இதனிடையே சீனிவாசனை வெட்டிக் கொல்ல முயன்றதாக, 7 பேர் நேற்று முன்தினம் நொளம்பூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். அவர்களை திருமங்கலம் காவல் நிலையத்தில் போலீசார் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர்கள், யானைக்கவுனி பகுதியை சேர்ந்த பிரசாந்த் (27), ராஜேஷ் (20), கணேஷ் (40), சரவணன் (27), மகேஷ் (28), சிவா (எ) சிவகுமார், பிராகஷ் (எ) மிளகாய் பிரகாஷ் என்பது தெரிந்தது. அவர்கள் அளித்த வாக்குமூலமாக போலீசார் கூறியதாவது: கடந்த 2005ம் ஆண்டு யானைக்கவுனி பகுதியில் நெடுஞ்செழியன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சினிவாசனுக்கு தொடர்பு இருப்பதும்,

இந்த சம்பவத்தில் சினிவாசனை பழிதீர்க்க முடிவு செய்து, கடந்த 2 ஆண்டுகளாக திட்டமிட்டு வந்ததும், அதன்படி, தனியாக பைக்கில் சென்ற சீனிவாசனை நோட்டமிட்டு, சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினோம், என தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து 3 கத்திகள், 5 செல்போன்கள், ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், 7 பேர் மீதும் வழக்கு பதிந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post பாஜ பிரமுகரின் கணவரை வெட்டிய விவகாரம்: 19 ஆண்டுக்கு முன் நடந்த கொலைக்கு பழிதீர்க்க சரமாரியாக வெட்டினோம்: கைதான 7 பேர் பரபரப்பு வாக்குமூலம் appeared first on Dinakaran.

Related Stories: