பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் 100 நாள் வேலை கேட்டு 8 ஆயிரம் தொழிலாளர்கள் மனு

 

சத்தியமங்கலம், ஜூன் 15: சத்தியமங்கலம் அருகே உள்ள செண்பகப்புதூர் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் வேலை கேட்டு ஊராட்சி தலைவரிடம் மனு அளித்தனர்.
மத்திய அரசு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டம், 2005ல் நிறைவேற்றியது. இந்த, சட்டம் வேலை கோரும் மற்றும் விருப்பமுள்ள ஒரு கிராமப்புற குடும்பத்தை சேர்ந்த வயது வந்தோருக்கு ஒரு நிதியாண்டில் 100 நாள் கூலி வேலைக்கான சட்டப்பூர்வ உத்தரவாதத்தை அளிக்கிறது.

இந்த, சட்டத்தின் பிரிவு 3(1) மற்றும் பத்தி எண் 9 அட்டவணை 11ன் படி இத்திட்டத்தில் வேலை வேண்டி சம்பந்தப்பட்ட ஊராட்சியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவருக்கு 15 நாட்களுக்குள் வேலை வழங்க இயலாவிட்டால் பிரிவு 7 (1)ன்படி வேலையில்லா காலத்திற்கான நிவாரணமாக அவரது ஊதியத்தில் 50 சதவீதத்தை வழங்கிட வேண்டும் என சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. ஆகவே, கடந்த 2 மாதங்களாக வேலை வழங்காத நிலையில் நேற்று 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் மாவட்டத்தின் பல பகுதிகளில் அந்தந்த ஊராட்சிகளில் திரண்டு தனி நபர் வேலைக்கு வரும் விண்ணப்பத்தை வழங்கினர்.

குறிப்பாக, சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள 15 ஊராட்சிகள், பவானிசாகர் வட்டாரத்தில் உள்ள 15 ஊராட்சிகள், தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகள் என மொத்தம் 40 ஊராட்சிகளில் 8 ஆயிரம் மனுக்கள் வழங்கப்பட்டன. 100 நாள் வேலை திட்ட தொழிலாளர் சங்க நிர்வாகிகள் பு. புளியம்பட்டி சக்திவேல், மகேந்திரன், பவானிசாகர் வேலுமணி, சத்தியமங்கலம் மகேந்திரன், சுரேந்தர், நடராஜ், தாளவாடி மோகன், ஆசனூர் அருள்சாமி, கடம்பூர் ராமசாமி மற்றும் சங்க நிர்வாகிகள் தலைமையில் அந்தந்த ஊராட்சிகளில் மனுக்களை அளித்தனர்.

The post பவானிசாகர், சத்தியமங்கலம், தாளவாடி வட்டாரங்களில் 100 நாள் வேலை கேட்டு 8 ஆயிரம் தொழிலாளர்கள் மனு appeared first on Dinakaran.

Related Stories: