அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி

 

ஈரோடு, ஜூன் 12: ஈரோடு மாவட்டத்தில் நீட் தேர்வு எழுதிய 132 அரசு பள்ளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் மருத்துவ படிப்புக்காக நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதனால், அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வுக்காக சிறப்பு பயிற்சி வகுப்பும் நடத்தப்படுகிறது.

ஈரோடு மாவட்டத்திலும் நீட் தேர்வுக்காக விண்ணப்பித்திருந்த அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டன. மாவட்டத்தில் மொத்தம் 8 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. இந்த தேர்வில் அரசு பள்ளிகளில் படித்த 132 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்று உள்ளனர். இது குறித்து, ஈரோடு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சம்பத் கூறியதாவது:

ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகளுக்கு நீட் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் எடுப்பதற்காக பயிற்சி அளிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் சமீபத்தில் பிளஸ்2 முடித்தவர்களும், கடந்த ஆண்டு பிளஸ்2 முடித்தவர்களும் தேர்வை எழுதி உள்ளனர். சமீபத்தில் பிளஸ்2 முடித்தவர்களில் 75 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில், அதிகபட்சமாக 700க்கு 613 மதிப்பெண்கள் மாணவர் எடுத்து உள்ளார்.

இதேபோல், பிளஸ்2 முடித்து ஒரு ஆண்டுக்கு மேல் இடைவெளி விட்டு தேர்வை எழுதியவர்களில் 57 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில், அதிகபட்சமாக 457 மதிப்பெண்களை மாணவர் பெற்றார். மாவட்டத்தில் மொத்தமாக நீட் தேர்வு எழுதிய அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் 132 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

The post அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: