முதல்வராக பதவியேற்ற வேகத்தில் பிபிசிஎல் நிறுவனத்தை ஆந்திராவிற்கு கொண்டு வர சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை

திருமலை: முதல்வராக பதவியேற்ற வேகத்தில் பி.பி.சி.எல் நிறுவனத்தை ஆந்திராவிற்கு கொண்டு வர சந்திரபாபு நாயுடு மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்ற பின்னர் மாநிலத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் தயாராகி வருகின்றன. பிபிசிஎல் (பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை திட்டத்தை ஆந்திர மாநிலத்திற்கு ஒதுக்க மத்திய அரசுடன் முனைப்புடன் முதல்வர் பேசி வருகிறார். ரூ.50 ஆயிரம் கோடி பெரிய முதலீட்டில் சுத்திகரிப்பு நிலையத்தை ஆந்திராவில் அமைக்க பிபிசிஎல் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு நடந்தால், மச்சிலிப்பட்டினத்தில் பிபிசிஎல் சுத்திகரிப்பு நிலையம் அமைய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். இந்த திட்டம் ஆந்திராவுக்கு வந்தால், ஆயிரக்கணக்கான உள்ளூர் மக்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஆந்திராவுக்கு புதிதாக ஐடி நிறுவனங்களை அழைத்துவருவேன் என்று அமைச்சர் நாரா லோகேஷ் தெரிவித்துள்ளார்.

* அமைச்சர்கள் இலாகா ஒதுக்கீடு
ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுநாயுடு அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 24 பேருக்கு இலாகா நேற்று ஒதுக்கப்பட்டது. அதன்படி, ஜனசேனா கட்சித் தலைவர் நடிகர் பவன் கல்யாணுக்கு துணை முதல்வர் பதவியுடன் பஞ்சாயத்து ராஜ், ஊரக வளர்ச்சி துறை, ஊரக குடிநீர் விநியோகம், வனத்துறை, சுற்றுச்சூழல், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷுக்கு மனிதவள மேம்பாடு தகவல் தொழில்நுட்ப எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் துறை வழங்கப்பட்டுள்ளது. முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் பொது நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் எந்த அமைச்சர்களிடமும் துறை ஒதுக்கப்படாத அனைத்தையும் தன் வசம் வைத்துள்ளார்.

The post முதல்வராக பதவியேற்ற வேகத்தில் பிபிசிஎல் நிறுவனத்தை ஆந்திராவிற்கு கொண்டு வர சந்திரபாபு நாயுடு பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: