தொழிலதிபர்கள், நடிகர்களுக்கு முன்வரிசையில் சீட் மோடியின் பதவியேற்பு விழாவில் ராணுவ தளபதிகளுக்கு அவமதிப்பு? காங்கிரஸ் எம்பிக்கள், மாஜி வீரர்கள் கண்டனம்

புதுடெல்லி: மோடியின் பதவியேற்பு விழாவில் ராணுவ தளபதிகள் அவமதிக்கப்பட்டதாக காங்கிரஸ் எம்பிக்கள், மாஜி வீரர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி மூன்றாவது முறையாக கடந்த 8ம் தேதி மீண்டும் பிரதமராக பதவியேற்றார். ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், அண்டை நாடுகளின் தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 8,000க்கும் மேற்பட்ட விஐபிக்கள் அழைக்கப்பட்டனர். எனினும், பதவியேற்பு விழாவில் நெறிமுறைகள் கடுமையாக மீறப்பட்டதாக தற்போது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தொழிலதிபர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு பின்னால், நாட்டின் ராணுவ தளபதிகளை உட்கார வைத்து அவர்களை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்கு முன் வரிசையில் இருக்கைகள் வழங்கப்பட்டன. ராணுவத்தின் உயர் பதவிகளில் இருப்பவர்களுக்கு மிகவும் பின்னால் இருக்கைகள் போடப்பட்டிருந்தன. ராணுவ தளபதிகள் ஜெனரல் அனில் சவுகான், ஜெனரல் மனோஜ் சி.பாண்டே போன்றோர் ஐந்தாவது வரிசையில் அமர்ந்திருந்தனர். அதுவும் அவர்கள் கூட்டத்தோடு கூட்டமாக நடுவில் அமர்ந்திருந்தார்கள். தொழிலதிபர்கள் கவுதம் அதானி, அவரது மனைவி ப்ரீத்தி, முகேஷ் அம்பானி, அவரது மகன் ஆனந்த் அம்பானி, பாலிவுட் நடிகர்கள் அக்‌ஷய் குமார், ஷாருக்கான் உள்ளிட்டோர் முன்வரிசையில் அமர்ந்திருந்தனர். நாகாலாந்து, திரிபுரா, சிக்கிம், கோவா உள்ளிட்ட மாநிலங்களின் முதல்வர்கள், தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்களுக்குப் பின்னால் மூன்றாவது வரிசையில் அமர்ந்திருந்தனர்.

அரியானா மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்பி திபேந்தர் ஹூடா, பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மக்களவை உறுப்பினரும், காங்கிரஸ் தலைவருமான தரம்வீர் காந்தி, முன்னாள் ராணுவ வீரரும் எழுத்தாளருமான பிரவீன் சாஹ்னி ஆகியோரும் அரசுக்கு எதிராக தங்களது குற்றச்சாட்டை பதிவு செய்தனர். அந்த வகையில் தீபேந்தர் ஹூடா வெளியிட்ட பதிவில், ‘பிரதமர் மற்றும் ஒன்றிய அமைச்சரவையின் பதவியேற்பு விழாவில் கூட்டு ராணுவப் படைத் தலைவர்கள் மற்றும் முப்படைகளின் தலைவர்கள் ஆகியோர் பிரபல தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பட நட்சத்திரங்களுக்குப் பின்னால் அமர்ந்துள்ளனர். இதுதான் நாட்டின் ராணுவத்துக்கு செலுத்தக் கூடிய மரியாதையா?, தேசபக்தியா?. இந்தியாவை பணக்காரர்களின் நாடாக மாற்ற அனுமதிக்க மாட்டோம்’ என்று கூறியுள்ளார்.

The post தொழிலதிபர்கள், நடிகர்களுக்கு முன்வரிசையில் சீட் மோடியின் பதவியேற்பு விழாவில் ராணுவ தளபதிகளுக்கு அவமதிப்பு? காங்கிரஸ் எம்பிக்கள், மாஜி வீரர்கள் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: