பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில் புதைத்த மகன், மருமகன்: இன்று உடலை தோண்டி எடுத்து பரிசோதனை

நாமக்கல்: சொத்து தகராறில் பஸ் டிரைவரை மகன், மருமகன் அடித்துக்கொலை செய்து உடலை ஏரியில் புதைத்துள்ளனர். அவரின் உடல் இன்று தோண்டி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த பாலமேடு கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம் (58). தனியார் பஸ் டிரைவராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தி (48). இவர்களுக்கு கார்த்திக் (32) என்ற மகனும், பிரியா (28) என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது.

இந்நிலையில் கடந்த 3ம் தேதி வீட்டில் இருந்த செல்வம் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது மருமகள் சசிகா (29), மல்லசமுத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், சொத்தில் பங்கு பிரிப்பது தொடர்பாக தனது கணவர் கார்த்திக் மற்றும் பிரவீன்குமார் ஆகியோருக்கும், தனது மாமனார் செல்வத்திற்கும் தகராறு இருந்து வந்தது. இதனால் அவர்கள் மீது சந்தேகம் உள்ளதாக கூறியிருந்தார்.

இதையடுத்து போலீசார் விசாரணை வளையத்திற்குள் அவர்களை கொண்டு வந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அதில், அவர்கள் இருவரும் செல்வத்தை கொலை செய்து எலச்சிபாளையம் அருகே திம்மராத்தம்பட்டி ஏரியில் உடலை புதைத்தாக அதிர்ச்சி தகவலை தெரிவித்தனர். இந்தகொலை தொடர்பாக கார்த்திக், பிரவீன்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இன்று திருச்செங்கோடு தாசில்தார் விஜயகாந்த் முன்னிலையில், செல்வத்தின் உடலை தோண்டி எடுத்து டாக்டர்கள் மூலம் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பஸ் டிரைவரை கொன்று உடலை ஏரியில் புதைத்த மகன், மருமகன்: இன்று உடலை தோண்டி எடுத்து பரிசோதனை appeared first on Dinakaran.

Related Stories: