கூடலூரில் பரபரப்பு பழக்கடையில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது

கூடலூர் : கூடலூர் பகுதியில் பழக்கடையில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நீலகிரி மாவட்டம், கூடலூர் பஜார் பகுதியில் தெருவோர பழக்கடை நடத்தி வருபவர் சாகுல் அமீது (58) இவரது கடையில் கஞ்சா பதுக்கி விற்பனை செய்வதாக கூடலூர் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், தெருவோரம் கடை நடத்தும் சாகுல் அமீதின் கடையை போலீசார் சோதனையிட்டனர்.

அப்போது, கடையில் 1 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததை கண்டுபிடித்து அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, போலீசார் விசாரணை நடத்தியதில், கூடலூரை அடுத்த  மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட வடவயல் பகுதியில் வசித்து வரும் பிஜு (52) என்பவர் கஞ்சா கொண்டு வந்து தனக்கு கொடுப்பதாகவும், அதை தனது கடையில் வைத்து வியாபாரம் செய்து வருவதாகவும் சாகுல் ஹமீது கூறியுள்ளார்.

இதையடுத்து, வடவயல் பகுதியில் இருந்த பிஜுவை போலீசார் வளைத்து பிடித்தனர். தொடர்ந்து, பிஜூவிடம் நடத்திய விசாரணையில் பிஜு மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் இருந்து வருவதும், கேரள மாநிலம் கள்ளிக்கோட்டை மாவூர் பகுதி காவல் நிலையத்தில் ஏற்கனவே இவர் மீது 11 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பான வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது.

மேலும் ஆந்திர மாநிலம் கனகப்பள்ளி காவல் நிலையத்தில் வங்கியில் கள்ள நோட்டு மாற்றிய குற்றத்திற்காக கடந்த ஆண்டு இவர் மீது ஆந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர். அந்த வழக்கில் ஜாமீனில் வந்த, பிஜூ தற்போது வெளி மாநிலத்திலிருந்து கஞ்சா கடத்தி வந்து கூடலூர் பகுதியில் உள்ள பல பகுதிகளுக்கும் மொத்த விற்பனை செய்து வருவதும் தெரியவந்துள்ளது.

பழக்கடை வியாபாரி சாகுல் ஹமீது மற்றும் கஞ்சா சப்ளை செய்த பிஜூ ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த கூடலூர் போலீசார் இருவரையும் கைது செய்து, கூடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் கூடலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து நேற்று போலீசார் சாகுல் அமீதின் பழக்கடையை அப்பகுதியில் இருந்து காலி செய்து பொருட்களை அகற்றினர். மேலும், இனிமேல் அமீது சாலை ஓரத்தில் கடை நடத்த அனுமதிக்கப்பட மாட்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

The post கூடலூரில் பரபரப்பு பழக்கடையில் கஞ்சா பதுக்கி விற்ற 2 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: