மோடியின் 400 கோஷம் பின்னடைவுக்கு காரணம்: ஏக்நாத் ஷிண்டே கருத்து

மும்பை: பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் 400-ஐ தாண்டும் என்ற முழக்கம் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது என்று மகாராஷ்டிரா முதல்வர் அதிருப்தி தெரிவித்தார். மகாராஷ்டிர மாநில முதல்வரும், சிவசேனா தலைவருமான ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில், ‘நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 400 தொகுதிகளில் வெல்வோம் என்று மோடி முழங்கியதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும் இழப்பை சந்தித்துள்ளது.

இந்த முழக்கம் தீவிரமானதால், இந்திய அரசியலமைப்பை மாற்றுவார்களா?, இட ஒதுக்கீடு ரத்து செய்வார்களா? என்ற அச்சம் மக்களிடையே எழத் தொடங்கியது. ஆனால், முதல் கட்டத் தேர்தலுக்குப் பிறகு இந்த முழக்கம் மீதான விவாதம் நிறுத்தப்பட்டது. 400-ஐ தாண்டும் என்ற முழக்கத்தை வைத்து எதிர்க்கட்சிகள் உருவாக்கிய பொய்யான கதையின் மூலமாக சில இடங்களில் தோல்வியை சந்திக்க நேரிட்டது.

மகாராஷ்டிராவிலும் அதன் சேதத்தை சந்திக்க நேரிட்டது’ என்றார். மகாராஷ்டிராவில் உள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 7 இடங்களில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனாவும், 9 இடங்களில் பாஜகவும், ஒரு இடத்தில் மட்டும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரசும் வெற்றி பெற்றன. எதிர்க்கட்சியான இந்தியா கூட்டணியில், காங்கிரஸ் 13 இடங்களிலும், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களிலும், சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் 8 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. சுயேச்சை ஒருவரும் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

The post மோடியின் 400 கோஷம் பின்னடைவுக்கு காரணம்: ஏக்நாத் ஷிண்டே கருத்து appeared first on Dinakaran.

Related Stories: