எதிர்காலத்தில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா? செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிலடி: காங்கிரஸ் பொதுக்குழுவில் பரபரப்பு

சென்னை: எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சி கூட்டணி வேண்டுமா, வேண்டமா என செல்வப்பெருந்தகை பேசியதற்கு, முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் மேடையிலேயே பதிலடி கொடுத்தார். இது பொதுக்குழுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தமிழக காங்கிரஸ் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நேற்று நடந்தது. இதில், செல்வப்பெருந்தகை பேசியதாவது: நமது காங்கிரஸ் இயக்கத்திற்கு என்று வரலாறு இருக்கிறது. எவ்வளவு காலம் சார்ந்திருப்போம் என்பதற்கு விடை உங்களிடம் உள்ளது. நாம் எந்த திசையில் செல்கிறோம் என்பதை தலைவர்களும், தோழர்களும் முடிவு செய்ய வேண்டும். கிராமங்களில் காங்கிரஸ் தலைவர்கள் கால் படாத இடமே இல்லாமல் இருக்கக்கூடாது என்ற அளவில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரையை தொடங்குவோம். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிலையில், செல்வப்பெருந்தகை பேச்சுக்கு மேடையில் வைத்தே பதிலடி கொடுத்திருக்கிறார் ஈவிகேஎஸ்.இளங்கோவன். அவர், பேசியதாவது: இன்றைக்கு 40க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு காரணம் திமுகவும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் தான் என்பதை மறந்து விடக்கூடாது. அன்றைக்கு தனித்துப் போட்டியிட்ட போது கன்னியாகுமரியிலும் சிவகங்கை தொகுதியில் மட்டும் தான் ஒரு லட்சம் வாக்குகள் கிடைத்தது. ஆனாலும் அனைத்து தொகுதிகளிலும் டெபாசிட் இழந்தோம். யாருக்குத் தான் இங்கே ஆசை இல்லை, வெற்றி பெற வேண்டும் என்று ஆசை இல்லாமலா இருக்கிறது. ஆனால் ஆசை பேராசை ஆகி விடக்கூடாது. நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை விட நமக்கு முன்னால் இருக்கும் எதிரியை வீழ்த்த வேண்டும் என்பதுதான் நம் எண்ணமாக இருக்க வேண்டும்.

அதை விடுத்து நான் தனியாக இருப்பேன், நான் தனியாக வெற்றி பெறுவேன் என கூறினால் அது உங்கள் இஷ்டம். நான் யாருக்கும் பகைவன் அல்ல. உங்களுக்கு இருக்கும் அதே காங்கிரஸ் உணர்ச்சி தான் எனக்கும் இருக்கிறது. தமிழ்நாட்டில் காங்கிரசை காலூன்ற வைத்த பெரியாரின் குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறேன். காங்கிரஸ் தலைமையில் காமராஜர் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் எனக்கும் ஆசை தான். எதிரியை ஒழிக்காமல் அந்த இடத்தை பிடிக்க முடியாது. இவ்வாறு அவர் பேசினார். அப்போது பொதுக்குழுவில் கலந்துகொண்டிருந்த பலர் இளங்கோவனின் பேச்சை கைதட்டி வரவேற்றனர். தமிழக காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கோஷ்டிகள் செயல்பட்டு வரும் நிலையில், மாநில தலைவர் தனித்து செயல்பட வேண்டும் என பேசியதும், அதற்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேராசைப்படக் கூடாது என பேசியதும் காங்கிரஸ் பொதுக்குழுவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

* சோமன்னாவை மாற்ற வேண்டும்
மோடி தலைமையில் அமைந்த அமைச்சரவையில் ஜல்சக்தி மற்றும் ரயில்வே துறை இணையமைச்சராக வி.சோமன்னா பதவியேற்றிருப்பது காவிரி உள்ளிட்ட நதிநீர் பிரச்சனைகளில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என இக்கூட்டம் கருதுகிறது. தமிழ்நாட்டின் உரிமைகளை தொடர்ந்து பறித்து வருகிற கர்நாடகத்தைச் சேர்ந்த வி.சோமன்னா, ஜல்சக்தி பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவிக்க கேட்டுக் கொள்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

The post எதிர்காலத்தில் கூட்டணி வேண்டுமா, வேண்டாமா? செல்வப்பெருந்தகை பேச்சுக்கு ஈவிகேஎஸ்.இளங்கோவன் பதிலடி: காங்கிரஸ் பொதுக்குழுவில் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: