முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி

புதுடெல்லி: ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக, கூட்டணி கட்சிகளுக்கு செல்வாக்கு குறைந்த இலாகா ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் முக்கிய துறைகளின் அமைச்சகங்களை பாஜக தன்வசம் வைத்துக் கொண்டது. நேற்று அமைச்சர்களின் இலாகா துறை வாரியாக அறிவிக்கப்பட்ட நிலையில், பாதுகாப்பு, உள்துறை, சுகாதாரம், போக்குவரத்து, வெளியுறவு, நிதி, கல்வி, ஜவுளி, எரிசக்தி, நகர்ப்புற வளர்ச்சி, விவசாயம், வர்த்தகம், எரிசக்தி, கப்பல் மற்றும் நீர்வழிகள், நுகர்வோர் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, தொலைத்தொடர்பு, சுற்றுச்சூழல், சுற்றுலா, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, தொழிலாளர் நலம், விளையாட்டு, நிலக்கரி மற்றும் சுரங்கம், ஜல் சக்தி போன்ற முக்கிய துறைகளை பாஜகவே வைத்துக் கொண்டது. அதேநேரம் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கூட்டணி கட்சிகளுக்கு முக்கியத் துறைகள் ஒதுக்கப்படவில்லை.

இதனால் கூட்டணி கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் தங்களது கட்சிக்கு கேபினட் அந்தஸ்து அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்று, சிவசேனா போர்க்கொடி தூக்கியுள்ளது. சிவசேனாவுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி மட்டுமே ஒதுக்கப்பட்டதால், பாஜக – சிவசேனா இடையிலான உறவில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதேபோல் அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசுக்கு ஒரு இணை அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டது. ஆனால் இணை அமைச்சர் பதவி வேண்டாம், கேபினட் அமைச்சர் பதவி தான் வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கூறிவிட்டது. அதனால் அக்கட்சியின் எம்பி பிரபுல் படேல், ஒன்றிய அமைச்சர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். ஒன்றிய அமைச்சரவை பதவியேற்று 24 மணி நேரத்துக்குள் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் அமைச்சர் பதவிகள் கேட்டு போர்க்ெகாடி தூக்கியுள்ளதால், பாஜக தலைமைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

கூட்டணி கட்சிகளுக்கு மட்டும் அமைச்சரவையில் 11 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தெலுங்கு தேசம் கட்சியின் ராம் மோகன் நாயுடுவுக்கு சிவில் விமான போக்குவரத்து, சந்திரசேகர் பெம்மாசானிக்கு ஊரக வளர்ச்சி மற்றும் தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன் சிங்குக்கு பஞ்சாயத்து ராஜ், ராம்நாத் தாக்கூருக்கு விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்எல்டி கட்சியின் ஜெயந்த் சவுத்ரிக்கு, திறன் மேம்பாட்டுத் துறை மற்றும் கல்வித்துறை இணை அமைச்சர் பதவியும், லோக் ஜனசக்தி கட்சியின் சிராக் பாஸ்வானுக்கு உணவு மற்றும் பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டுள்ளது. அவரது தந்தை ராம்விலாஸ் பஸ்வானுக்கும் வழங்கப்பட்ட இதே அமைச்சகம் மகனுக்கும் வழங்கப்பட்டுள்ளது. சிவசேனாவின் ஜாதவ் பிரதாப் ராவ் கணபத் ராவுக்கு ஆயுஷ் அமைச்சர் இணை அமைச்சர் பதவியும், பீகார் முன்னாள் முதல்வரான ஜிதன் ராம் மஞ்சிக்கு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையும் வழங்கப்பட்டுள்ளது.

மதசார்பற்ற ஜனதா தளத்தின் ஹெச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில்கள் மற்றும் எஃகு துறையும், குடியரசு கட்சியின் தலைவர் ராம்தாஸ் அத்வாலேவுக்கு சமூக நீதித்துறை இணை அமைச்சர் பதவியும், அப்னா தளத்தின் அனுப்ரியா படேலுக்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, உரத் துறை இணை அமைச்சர் பதவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறாக கூட்டணி கட்சிகளுக்கு ெசல்வாக்கு இல்லாத இலாகாக்களை ஒதுக்கிவிட்டு, முக்கிய இலாகாக்களை பாஜக தன்வசப்படுத்திக் கொண்டதால், கூட்டணி கட்சியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்கள் மெல்லவும் முடியாமல், முழுங்கவும் முடியாமல் உள்ளனர். தேசியவாத காங்கிரஸ், சிவசேனா போன்ற கட்சித் தலைவர்கள், தங்களது கட்சிக்கு அமைச்சரவையில் உரிய பிரதிநிதித்துவம் தரவில்லை என்றும், அமைச்சர் பதவி ஒதுக்கீட்டில் மோடி பாரபட்சம் காட்டுவதாக குற்றம்சாட்டி வருகின்றனர். பதவியேற்ற சில நாட்களிலேயே பதவிக்காக கூட்டணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் தேசிய அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

The post முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட பாஜக: கூட்டணி கட்சிகளுக்கு ‘செல்வாக்கு’ குறைந்த இலாகா ஒதுக்கீடு.! சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகள் போர்க்கொடி appeared first on Dinakaran.

Related Stories: