ஹாரன் அடித்ததால் தகராறு பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரி அடித்து உதைத்து பணப் பை பறிப்பு

*பெண்கள் உள்பட 30 பேர் கும்பல் வெறிச்செயல்

போச்சம்பள்ளி : போச்சம்பள்ளி அருகே, டூவீலரை எடுக்கச் சொல்லி ஹாரன் அடித்த தனியார் பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கிய கும்பல், பணப்பையை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூர் கோட்டப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(47). தனியார் பஸ்சில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, தர்மபுரியிலிருந்து புலியூர் வழியாக, ஊத்தங்கரையை நோக்கி பஸ்சை ஓட்டிச்சென்றார். புலியூர் நிறுத்தத்தில் பஸ் நிறுத்தப்பட்டது. பயணிகளை இறங்கி கொண்டிருந்தனர். அப்போது, டூவீலரில் வந்த அதே பகுதியை சேர்ந்த பிரதாப் என்பவர், பஸ்சின் முன்பு டூவீலரை நிறுத்தி விட்டு, சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தார்.

பயணிகள் பஸ்சில் ஏறியவுடன், டூவீலரை எடுக்கும்படி சொல்லி, கிருஷ்ணன் ஹாரன் அடித்துள்ளார். அப்போது, எதற்கு ஹாரன் அடிக்கிறாய்? எனக்கேட்ட பிரதாப், டிரைவர் கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை தகாத வார்த்தையால் திட்டியுள்ளார். இதனால், பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணன், போலீசில் புகார் அளிப்பதாக கூறி, டூவீலரிலிருந்த சாவியை எடுத்துள்ளார். இதனை தடுக்க முயன்ற பிரதாப், கண்டக்டர் ஆறுமுகத்தின் கழுத்தை நெரித்துள்ளார். இதனை கவனித்த கிருஷ்ணன், பிரதாப்பை கீழே தள்ளி விட்டார். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள், இருதரப்பையும் சமாதானப்படுத்தி, பஸ்சை அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில், பஸ் ஊத்தங்கரை சென்று விட்டு, இரவு மீண்டும் மேட்டுக்கடை பஸ் நிறுத்தம் வந்த போது, பஸ்சில் 10க்கும் மேற்பட்டோர் ஏறினர். அவர்கள் புலியூர் பஸ் நிறுத்தம் வந்தபோது, கண்டக்டர் ஆறுமுகத்தை சரமாரியாக தாக்கினர். அந்த கும்பலை சேர்ந்த ஒருவர், தனது கையில் அணிந்திருந்த இரும்பு காப்பால், ஆறுமுகத்தின் கன்னத்தில் பலமாக தாக்கியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர், அவரை பஸ்சில் இருந்து இழுத்து கீழே தள்ளினர்.

மேலும், பஸ் நிறுத்தத்தில் காத்திருந்த 30 பேர் கொண்ட கும்பல், கண்டக்டரை சரமாரியாக தாக்கி, அவரது கையில் இருந்த பணப்பையை பிடுங்கி, அதிலிருந்த ₹21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு, பேக்கை பஸ்சின் அடியில் வீசி விட்டுச் சென்று விட்டனர். அதே நேரம், டிரைவர் கிருஷ்ணனை 2 பெண்கள் உள்பட 5 பேர் கும்பல் சரமாரியாக தாக்கி, காலால் உதைத்தனர். இதை பார்த்த அங்கிருந்தவர்கள், பாரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு விரைந்து வந்த போலீசாரை கண்டதும், பிரதாப் உள்ளிட்ட கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

இந்த தாக்குதலில் காயமடைந்த டிரைவர், கண்டக்டரை போலீசார் மீட்டு, போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், பஸ்சில் இருந்த பயணிகளை மாற்று பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஹாரன் அடித்ததால் தகராறு பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரி அடித்து உதைத்து பணப் பை பறிப்பு appeared first on Dinakaran.

Related Stories: