செங்குன்றம் சாமியார் மடம் சிக்னலில் சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

புழல், ஜூன் 11: செங்குன்றம் சாமியார் மடம் சிக்னலில் சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை, செங்குன்றம் சாமியார் மடம் சிக்னலில் ஏராளமான மாடுகள் சாலையின் இரண்டு பக்கங்களிலும் சுற்றி திரிகின்றன. அப்போது வாகன ஓட்டிகள் அதிகமான ஒலி எழுப்பினால் மாடுகள் மிரண்டு சாலையின் குறுக்கே செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.

இதனால் பைக்கில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் செல்லும்போது இந்தப் பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் மாடுகளின் மீது மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட பேரூராட்சி, ஊராட்சி அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை, செங்குன்றம் போக்குவரத்து துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை சிறை பிடித்து, மாடுகளின் உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்குமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து செங்குன்றம் சுற்று வட்டார பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் கூறுகையில், செங்குன்றம் சாமியார் மடம் சிக்னல் மற்றும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் தினசரி மாடுகள் சுற்றி திரிகின்றன. இதனால் வாகனங்களில், குறிப்பாக பைக்கில் செல்பவர்கள் மாடுகள் மீது மோதி படுகாயம் அடைகின்றன. இந்த பகுதியில் இரவு நேரங்களில் மின்விளக்குகள் இல்லாததால் அதிக விபத்துகள் ஏற்படுகிறது. இது குறித்து சம்பந்தப்பட்ட செங்குன்றம் போக்குவரத்து துறை அலுவலகத்திலும், இந்த சாலையை பராமரித்து வரும் நல்லூர் சுங்கச்சாவடியில் உள்ள அலுவலகத்திலும் பலமுறை புகார் தெரிவித்தும் சாலையில் சுற்றி தெரியும் மாடுகளை சிறை பிடிக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதே நிலை நீடித்தால் சாலை மறியல் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

The post செங்குன்றம் சாமியார் மடம் சிக்னலில் சாலையில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்து: நடவடிக்கை எடுக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: