பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணையாவிட்டால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றிபெற முடியாது: ஓபிஎஸ் பேட்டி

சென்னை:டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு, நேற்று மாலை விமானம் மூலம் சென்னை திரும்பிய முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, உங்கள் அணியில் இருந்த புகழேந்தி, ஜே.சி.டி.பிரபாகரன், கே.சி.பழனிசாமி உள்ளிட்டோர் அதிமுக ஒருங்கிணைப்புக் குழு தொடங்கியுள்ள நிலையில், அதில் நீங்கள் இணைவீர்களா என்ற கேள்விக்கு, `அவர்கள் எங்கிருந்தாலும் வாழட்டும்’ என்றார். திமுக கூட்டணியின் 40க்கு 40 வெற்றி குறித்த கேள்விக்கு, `அரசியலில் வெற்றி தோல்விகள் சகஜம். மக்களின் மன நிலையைப் பொறுத்து அது மாறும்’ என்றார்.

தமிழகத்தில் பாஜ பெற்ற வாக்குகள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி ஆதரவு வாக்குகள் என்று சொல்லப்படும் கருத்து குறித்த கேள்விக்கு, `இது பாஜ மாநில தலைவர் அண்ணாமலை உழைப்புக்கு கிடைத்த வெற்றி. அவர் பாஜ அணி வெற்றிக்காக கடுமையாக உழைத்தார்’ என்றார். அதிமுக 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது குறித்த கேள்விக்கு, `அந்த கட்சியின் தற்காலிக தலைவராக இருப்பவரிடம் தான் இதைக் கேட்க வேண்டும். தென்சென்னை தொகுதியில், அதிமுக வேட்பாளர் (ஜெயவர்தன்) டெபாசிட் இழந்தது குறித்தும், அவரது தந்தையாரிடம்தான் (முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்) கேட்க வேண்டும். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பிரிந்து இருக்கும் சக்திகள் ஒன்றிணையவில்லை என்றால், எந்தக் காலத்திலும் வெற்றி பெற முடியாது’ என்றார்.

The post பிரிந்து இருப்பவர்கள் ஒன்றிணையாவிட்டால் எந்த காலத்திலும் அதிமுக வெற்றிபெற முடியாது: ஓபிஎஸ் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: