நீட் தேர்வு என்ற கல்வி மோசடியை இனியும் தொடர அனுமதிக்க கூடாது: ஜவாஹிருல்லா எச்சரிக்கை

சென்னை: மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவக் கனவினை கானல் நீராக்கும் நீட் தேர்வை அனுமதிக்க முடியாது என தமிழ்நாடு தொடக்கம் முதலே குரல் எழுப்பி வருகிறது. தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இதுதொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 ஆண்டு காலம் தரமான பள்ளிக் கல்வி பயின்று 600க்கு 600 மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் நுழைய முடியாது. பல லட்சங்கள் கொட்டி சில மாதங்கள் பயிற்சி நிலையத்தில் கற்றால் மட்டும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்றால் அது கல்வியா இல்லை வர்த்தகமா என்ற வேதனை வினாக்கள் ஒரு புறம் எழும்பிக் கொண்டேயிருக்கின்றன. நாடெங்கும் தேர்வுக்கு முன்பே வினாத்தாள்கள் வெளியாகி அந்த தேர்வின் நம்பகத்தன்மையை கேள்விக் குறியாக்கியுள்ளது. நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை தனது நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. தமிழ்நாட்டிலும், நீட்டை விரும்பாத இதர மாநிலங்களிலும் மருத்துவ மாணவர் சேர்க்கையை மாநில அரசுகளே நடத்திக் கொள்வதற்கான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வு மோசடியாளர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். நீட் மோசடி தேர்வை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

The post நீட் தேர்வு என்ற கல்வி மோசடியை இனியும் தொடர அனுமதிக்க கூடாது: ஜவாஹிருல்லா எச்சரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: