சித்தூரில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் என்.டி. ராமராவ் சிலை

*நள்ளிரவில் தெலுங்கு தேசம் கட்சியினர் அமைத்தனர்

சித்தூர் : சித்தூரில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் என்.டி.ராமராவ் சிலையை தெலுங்குதேசம் கட்சியினர் அமைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் காந்தி சர்க்கிள் பகுதியில் புதிய பேருந்து நிலையத்திற்கு செல்லும் சாலையில் தெலுங்கு தேசம் கட்சி நிறுவனருமான மறைந்த முன்னாள் முதல்வருமான என்டி ராமராவ் சிலை அமைக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில், கடந்த 2019ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேச கட்சி படுதோல்வி அடைந்தது. அப்போது, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மாபெரும் வெற்றி பெற்று 151 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. முதலமைச்சராக ஜெகன்மோகன் பதவி ஏற்றார். அவர் முதலமைச்சராக பதவியேற்ற சில மாதங்களிலேயே போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் சிலையை அகற்ற வேண்டும் என ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியினர் கலெக்டரிடம் மனு வழங்கினர்.

மனுவை விசாரித்த அப்போதைய கலெக்டர் மாநகராட்சிக்கு சிலையை அகற்ற உத்தரவு பிறப்பித்தார். அதன்படி மாநகராட்சி அப்போதைய ஆணையர் விஸ்வநாத் தலைமையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் சிலையை அப்பகுதியில் இருந்து அகற்றினர். இதனை கண்டித்து அப்போதைய தெலுங்கு தேச கட்சி முன்னாள் எம்எல்சி துரைபாபு, முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா மற்றும் தெலுங்கு தேச கட்சி மாவட்ட முன்னாள் தலைவர் நானி உள்ளிட்ட தெலுங்கு தேச கட்சியினர் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இருப்பினும் அவர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளாமல் அப்போதைய ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அரசு என்.டி ராமராவ் சிலையை அகற்றினர்.
சிலையை அகற்றப்பட்டு நான்கு வருடங்களுக்கு மேலாகி இருந்து வந்த நிலையில் தற்போது 2024ம் ஆண்டுக்கான சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற தேர்தலில், ஆந்திர மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது.

ஆந்திர மாநிலத்தில் வருகிற 12ம் தேதி ஆந்திர மாநில முதலமைச்சராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்.
தெலுங்கு தேசம் கட்சி ஆந்திர மாநிலத்தில் ஆட்சியை பிடித்ததை முன்னிட்டு சித்தூர் காந்தி சர்க்கிள் அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு சுமார் 11 மணியளவில் என்டி ராமராவ் சிலையை அகற்றிய பகுதியில் முன்னாள் எம்எல்சி துரைபாபு, சித்தூர் மாவட்ட தெலுங்கு தேசம் கட்சி துணைத் தலைவர் சந்திர பிரகாஷ், முன்னாள் மேயர் கட்டாரி ஹேமலதா மற்றும் தெலுங்கு தேச கட்சி முன்னாள் கவுன்சிலர்கள் ஆகியோர் தலைமையில் மீண்டும் அமைத்தனர்.

இது குறித்து முன்னாள் எம்எல்சி துரைபாபு தெரிவிக்கையில், அராஜக ஆட்சியில் 2019ம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் சிலையை போக்குவரத்து நெரிசல் என காட்டி அகற்றினார்கள். இது குறித்து நாங்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டும் தற்போது எங்கள் ஆட்சி ஆந்திர மாநிலத்தில் பொறுப்பேற்க உள்ள நிலையில் நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அகற்றிய என்டிராமராவ் சிலையை மீண்டும் நிறுவினோம்.

இனி சித்தூர் மாநகரத்தில் என்டிஆர் சர்க்கிள் என அழைக்கவும் நாங்கள் மாநகராட்சி கூட்டத் தொடரில் முன் வைப்போம்’ என்றார். நள்ளிரவில் என்.டி. சிலை அமைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

The post சித்தூரில் அகற்றப்பட்ட இடத்தில் மீண்டும் என்.டி. ராமராவ் சிலை appeared first on Dinakaran.

Related Stories: