மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி காலை வெட்டிய தொண்டரிடம் சசிகலா போனில் பேச்சு: கட்சியை காப்பாற்றுவேன் என வாக்குறுதி

தூத்துக்குடி: மக்களவை தேர்தலில் அதிமுக தோற்றதால் காலில் கத்தியால் வெட்டிக்கொண்ட தூத்துக்குடி அதிமுக தொண்டரிடம் கட்சியை காப்பாற்றுவேன், இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என சசிகலா பேசியது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக படுதோல்வி அடைந்தது. தென்சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை, வேலூர் தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. பல தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியுடன் போட்டி போடும் நிலை உருவானது.

எம்ஜிஆர் காலத்தில் இருந்து அதிமுக தொண்டராக உள்ள தூத்துக்குடி திரவியபுரத்தை சேர்ந்த செல்வகுமார் என்பவர் தனது நண்பரிடம் சபதம் போட்டபடி, அதிமுக தேர்தலில் தோற்றதால், தனது வலது காலில் கத்தியால் வெட்டி ரத்தத்தை சாலையில் விட்டு சபதத்தை நிறைவேற்றினார். இந்த தகவல் அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையறிந்த சசிகலா, தொலைபேசியில் செல்வகுமாரை தொடர்பு கொண்டு அவருக்கு ஆறுதல் கூறினார். அப்போது செல்வகுமார், ‘அதிமுக இவ்வளவு மோசமாக தோற்றதை என்னால் தாங்கிக் கொள்ளமுடியாமல் இப்படி செய்தேன். தாங்கள் எப்படியாவது அதிமுகவை ஒருங்கிணைத்து 2026 தேர்தலை சந்திக்க வேண்டும்’ என்று கூறினார்.

அதற்கு பதிலளித்த சசிகலா, ‘நீங்கள் இதுபோன்று உடலை வருத்தும் செயலில் ஈடுபடவேண்டாம். இதனால் நான் மிகுந்த வேதனைப்பட்டேன். என்னை நம்புங்கள், நிச்சயம் அதிமுகவை காப்பாற்றுவேன். மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சியமைப்போம். கவலைப்படாதீர்கள். விரைவில் உங்களை சந்திப்பேன்’ என்றார். சசிகலா தன்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியது, தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக செல்வகுமார் கூறினார். தொண்டரிடம் சசிகலா பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.

அதிமுக நிதியுதவி: கத்தியால் காலில் வெட்டிக்கொண்ட செல்வகுமாரை, அதிமுகவின் மாநில வர்த்தக அணிச் செயலாளர் சி.த.செல்லபாண்டியன், சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு அவருக்கு ஆறுதல் கூறிய எடப்பாடி நிதியுதவி வழங்கினார்.

The post மக்களவை தேர்தலில் அதிமுக படுதோல்வி காலை வெட்டிய தொண்டரிடம் சசிகலா போனில் பேச்சு: கட்சியை காப்பாற்றுவேன் என வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: