ஒய்எஸ்ஆர் காங். கவுன்சிலருக்கு நடுரோட்டில் கத்திக்குத்து: தெ.தேச கட்சியினர் மீது புகார்

திருமலை: ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேச கட்சியினர் இடையே கடந்த 2 நாட்களாக ஆங்காங்கே மோதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதேபோல் ஏலூர் மாவட்டம் நுஜி வீடு பகுதியில் நேற்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் பழைய பகைக்கு பின்னணியில் இருகட்சியினரும் நடுரோட்டில் கத்தியால் சரமாரி தாக்கி கொண்டனர். இதைபார்த்த பொதுமக்கள் மிகுந்த பதற்றமடைந்து ஓடினர்.

இந்த தாக்குதலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கவுன்சிலர் நந்திகுரு கிரீஷ், அவரது ஆதரவாளர் நுகலா சாய்கிரண் ஆகியோர் காயமடைந்தனர். கவுன்சிலர் நந்திகுரு கிரீஷை மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவுக்கு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இதுதொடர்பாக தெலுங்கு தேச கட்சியினர் மீது ஏலூர் எஸ்பி அலுவலகத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரசார் புகார் அளித்துள்ளனர். நடுரோட்டில் கவுன்சிலர் உள்ளிட்டோரை கத்தியால் தாக்கும் காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

* ஜெகன் கண்டனம்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தனது எக்ஸ் பதிவில், `மாநிலம் முழுவதும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் நடத்தும் தாக்குதல்களால் மிகவும் பயங்கரமான அசாதாரணமான சூழல் நிலவுகிறது. ஆட்சி அமைப்பதற்கு முன்பே தெலுங்கு தேசம் கட்சியினர் அராஜகத்தில் களமிறங்கி உள்ளனர். ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பாதுகாப்பின்றி உள்ளனர். எனவே கவர்னர் உடனடியாக தலையிட்டு அராஜகத்தை தடுத்து நிறுத்தவேண்டும் என பதிவிட்டுள்ளார்.

The post ஒய்எஸ்ஆர் காங். கவுன்சிலருக்கு நடுரோட்டில் கத்திக்குத்து: தெ.தேச கட்சியினர் மீது புகார் appeared first on Dinakaran.

Related Stories: