சபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை 2,000-ஆக குறைப்பு

திருவனந்தபுரம்: சபரிமலை மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை 2,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது. மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் நேற்று காலை ஆரன்முளாவில் இருந்து புறப்பட்டது.

இதில் திரளாக பக்தர்கள் பங்கேற்றனர். சபரிமலையில் பிரசித்தி பெற்ற மண்டல பூஜைக்கு இன்னும் 3 நாட்கள் மட்டுமே உள்ளன. இதனால் பக்தர்கள் வருகை மேலும் அதிகரித்து உள்ளது. இதனை அடுத்து டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். இதனிடையே சபரிமலையில் நடைபெற்ற கற்பூர ஆழி பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மண்டல பூஜைக்கு முன்னோடியாக திருவிதாங்கூர் தேவசம்போர்டு ஊழியர்கள் சார்பிலும், காவல்துறை துறை சார்பிலும் இரண்டு நாட்கள் கற்பூர ஆழி பவனி நடைபெறுவது வழக்கம்.

Related Stories: