சிறையில் இருந்தபடியே வென்ற 2 எம்பிக்கள்: நாடாளுமன்ற கூட்டங்களில் எவ்வாறு பங்கேற்பார்கள்? .. முழு விவரம்!!

புதுடெல்லி: சிறையில் இருந்து எம்.பி.யாக வெற்றி பெற்றுள்ள இன்ஜினியர் ரஷீத், அம்ரித்பால் ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு செல்ல வேண்டும் என்றால் நீதிமன்ற உத்தரவை பெறவேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. சீக்கிய மத போதகரான அம்ரித்பால் சிங் பஞ்சாப்பின் கதூர் சாஹிப் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 4 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இன்ஜினியர் ரஷித் என அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷித், ஜம்மு காஷ்மீரின் பாராமுல்லா தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு 4.72 லட்சம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரிடம் தான் உமர் அப்துல்லா தோல்வி அடைந்துள்ளார். தீவிரவாதி நிதி உதவி செய்த குற்றச்சாட்டின் உபா சட்டத்தின் கீழ் கைதாகி கடந்த 2019 ஆகஸ்ட் 9ம் தேதி முதல் டெல்லி திகாரில் ரஷித் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கைதான அம்ரித்பால் சிங் அசாமின் திப்ரூகர் சிறையில் கடந்த 2023 ஏப்ரல் முதல் அடைக்கப்பட்டுள்ளார்.

சிறையில் இருந்தாலும் இவர்கள் மக்களவை எம்பியாக பதவிப்பிரமாணம் செய்ய நேரில் வர அரசியலமைப்பு உரிமை உண்டு. இதற்காக சிறைத்துறையிடம் முறையாக அனுமதி பெற்று பதவியேற்பு விழாவில் பங்கேற்கலாம். அதே சமயம் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றால் நீதிமன்றத்தின் உத்தரவு தேவை என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். இது குறித்து டெல்லி சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்ட கைதி, நாடாளுமன்ற கூட்டங்களில் கலந்து கொள்ள நீதிமன்ற அனுமதி தேவை. அவர்களை சிறையில் இருந்து வெளியே அழைத்து செல்லும்போது இன்ஸ்பெக்டர் அல்லது உதவி ஆணையர் அந்தஸ்த்திலான அதிகாரிகள் பாதுகாப்புக்கு செல்ல வேண்டும். அப்போது அவர்கள் செல்போன் பேசுவதற்கும், எம்.பி.க்கள் மற்றும் நாடாளுமன்ற அதிகாரிகள் தவிர இதர நபர்களை சந்தித்து பேச கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’’ என்று தெரிவித்தார்.இதனிடையே குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 2 ஆண்டுக்கு மேல் தண்டனை வழங்கப்படும் பட்சத்தில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சிறையில் இருந்தபடியே வென்ற 2 எம்பிக்கள்: நாடாளுமன்ற கூட்டங்களில் எவ்வாறு பங்கேற்பார்கள்? .. முழு விவரம்!! appeared first on Dinakaran.

Related Stories: