சேலம் அருகே மாட்டை அடித்துக் கொன்றது வனத்துறை கோட்டை விட்டதால் மீண்டும் ஊருக்குள் வந்த சிறுத்தை

*மாவட்ட வன அலுவலர் நேரில் விசாரணை

*3 இடங்களில் கூண்டு வைத்து கண்காணிப்பு

காடையாம்பட்டி : காடையாம்பட்டி அடுத்துள்ள காருவள்ளி கிராமத்தில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அதிகாலை, மீண்டும் ஊருக்குள் புகுந்த சிறுத்தை, ஏற்கனவே கடித்து குதறிய மாட்டின் எஞ்சிய உடல் பாகங்களை சாப்பிட்டு விட்டு சென்ற சம்பவத்தால், கிராம மக்கள் பீதிக்குள்ளாகியுள்னர். இதையடுத்து, பல்வேறு இடங்களில் கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகே காருவள்ளி கிராமம், கோம்பை பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(46). இவர் ஆடு-மாடுகளை வளர்த்து வருகிறார். கடந்த 1ம் தேதி மாலை, தனது தோட்டத்தில் உள்ள பட்டியில் ஆடுகளை அடைத்து, மாடுகளை கட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை சென்று பார்த்த போது, ஒரு மாட்டை காணவில்லை. அக்கம், பக்கம் தேடிப்பார்த்த போது, சுமார் 200 அடி தொலைவில் கழுத்து மற்றும் பின்தொடை கடித்து குதறப்பட்டு, இழுத்துச் சென்ற நிலையில் மாடு இறந்து கிடந்தது. தகவலறிந்து டேனிஸ்பேட்டை வனத்துறை அதிகாரிகள், சம்பவ இடம் விரைந்து சென்று, அங்குள்ள வனப்பகுதி மற்றும் கரடு, வயல்வெளி ஆகிய பகுதிகளில் விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்தனர். அப்போது, பல இடங்களில் சிறுத்தையின் கால் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே, அப்பகுதியைச் சேர்ந்த சிலர், கரட்டின் உச்சியில் சிறுத்தையை பார்த்ததாக தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியில், வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர். மாடு இறந்து கிடந்த இடத்தை சுற்றிலும், 20க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தினர். நேற்று முன்தினம், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கால்நடை டாக்டர் வரவில்லை. இதனால், மாட்டின் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல், இரவு நேரத்தில் அங்கேயே போட்டு வைத்திருந்தனர். ஆனால், சிறுத்தையை பிடிப்பதற்கான கூண்டு எதுவும் வைக்கவில்லை. இந்நிலையில், நேற்று அதிகாலை நேரத்தில், அங்கு மீண்டும் வந்த சிறுத்தை, எஞ்சியிருந்த மாட்டின் உடல் பாகங்களை சாப்பிட்டு விட்டு சென்றுள்ளது. இந்த காட்சிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால், அப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, சேலம் மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி, சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்தார். கேமரா காட்சிகளை பார்வையிட்ட போது, மிகப்பெரிய அளவிலான சிறுத்தை ஒன்று, வந்து செல்வது பதிவாகியிருந்தது. இதையடுத்து, சிறுத்தை நடமாட்டம் உள்ள 3 இடங்களில் கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், சிறுத்தையை உயிருடன் பிடிப்பதற்கான ஆலோசனைகளை, மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி, வன அலுவலர்களுக்கு வழங்கினார். சிறுத்தையால் அடித்துக் கொல்லப்பட்ட மாட்டை, பிரேத பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, மாவட்ட வன அலுவலர் ஷஷாங் ரவி நிருபர்களிடம் கூறுகையில், ‘இந்த பகுதியில் சிறுத்தை இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிறுத்தை மிகப்பெரிய அளவில் இருப்பது தெரியவந்துள்ளது. சிறுத்தையிடம் மக்கள் சிக்கிக் கொள்ளாமல் இருக்க, வனத்தையொட்டி வசித்து வருவோருக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் பதுங்கியுள்ள சிறுத்தையை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் சிறுத்தை சிக்கும்,’ என்றார்.

தொடர்ந்து அப்பகுதியில் வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுதொடர்பாக வனத்துறையினர் கூறுகையில், ‘வனப்பகுதிக்கு பொதுமக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக கொண்டு செல்ல வேண்டாம். குழந்தைகளையும் வயல் பகுதிக்கு அனுப்ப வேண்டாம். சிறுத்தை நடமாட்டத்தை கண்டால், வனத் துறையினருக்கு உடனே தகவல் அளிக்க வேண்டும்,’ என்றனர்.

கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 8 மாதங்களுக்கு முன்பு, பக்கத்து கிராமத்திற்கு வந்த சிறுத்தை, ஆட்டை அடித்து சாப்பிட்டது. அதன் பிறகு பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள வனத்திற்கு சென்றது. பிறகு மேட்டூர் வனச்சரகத்திற்கு சென்ற சிறுத்தை, தற்போது மீண்டும் காருவள்ளி கிராமத்திற்கே வந்துள்ளது. இங்குள்ள கரட்டில் உலாவும் சிறுத்தை, ஒரு நாள் நாய் மற்றும் ஆட்டையும், கடந்த 2ம் தேதி இரவு மாட்டையும் அடித்து சாப்பிட்டுள்ளது. இதனால், மிகுந்த அச்சத்துடன் உள்ளோம்,’ என்றனர்.

The post சேலம் அருகே மாட்டை அடித்துக் கொன்றது வனத்துறை கோட்டை விட்டதால் மீண்டும் ஊருக்குள் வந்த சிறுத்தை appeared first on Dinakaran.

Related Stories: