கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு


ராஜபாளையம்: ராஜபாளையம் அருகே விசைத்தறி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தால் 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே சத்திரப்பட்டி, சமுசிகாபுரம், சங்கரபாண்டியபுரம், அய்யனாபுரம் பகுதிகளில் மருத்துவ துணி எனப்படும் காஸ் பேண்டேஜ் உற்பத்தி பிரதானமாக நடைபெறுகிறது. இத்தொழிலில் 500க்கும் மேற்பட்ட சிறு, குறு விசைத்தறி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு சொந்தமான 4 ஆயிரம் தறிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். மருத்துவ துணி உற்பத்தியாளர்கள், விசைத்தறி உரிமையாளர்கள் இடையே கடந்த 2022, ஜூன் மாதம் 3 ஆண்டுகளுக்கான கூலி உயர்வு ஒப்பந்தம் போடப்பட்டது. இந்த ஒப்பந்தப்படி 3ம் ஆண்டுக்கான கூலி உயர்வை இந்த மாத தொடக்கத்தில் இருந்து மருத்துவ துணி உற்பத்தியாளர்கள் வழங்க வேண்டும்.

ஆனால் கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதை கண்டித்து விசைத்தறி உரிமையாளர்கள் நேற்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தால் 4 ஆயிரம் விசைத்தறிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதை நம்பி வாழும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்தனர். நேற்று ஒரு நாள் மட்டும் தொழிலாளர்களுக்கு ரூ.12 லட்சம் வரை கூலி இழப்பு ஏற்பட்டுள்ளது. தறிகள் இயங்காததால் சுமார் ரூ.2 கோடி மதிப்பில் மருத்துவ துணி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மகாசபை கூட்டத்தில் கலந்து ஆலோசித்து அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும் என விசைத்தறி உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தக்கட்ட போராட்டத்தை தவிர்க்க ஒப்பந்தப்படி கூலி உயர்வு வழங்க உற்பத்தியாளர்கள் முன்வர வேண்டும் எனவும், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விசைத்தறி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post கூலி உயர்வு வழங்கக்கோரி விசைத்தறி உரிமையாளர்கள் ஸ்டிரைக்: 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: