நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல்

கூடலூர்: முல்லை பெரியாறு அணையை கண்காணித்து பராமரிக்க, கடந்த 2014ம் ஆண்டு 3 பேர் கொண்ட கண்காணிப்பு குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இக்குழுவில் கடந்த 2022ல் தமிழகம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த, தலா ஒரு தொழில்நுட்ப வல்லுநர் சேர்க்கப்பட்டார். இதனால் குழுவில் இருப்போர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இக்குழுவின் தற்போதைய தலைவராக ஒன்றிய நீர்வள ஆணைய தலைமைப்பொறியாளர் ராஜேஷ் உள்ளார். தமிழக பிரதிநிதிகளாக நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழும தலைவர் சுப்பிரமணியம், கேரள பிரதிநிதிகளாக அம்மாநில நீர்ப்பாசனத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் டாக்டர் வேணு, நிர்வாக தலைமைப் பொறியாளர் அலெக்ஸ் வர்கீஸ் ஆகியோர் உள்ளனர்.

இக்குழுவினர் கடந்தாண்டு மார்ச் 27ல் முல்லை பெரியாறு அணையை ஆய்வு செய்தனர். இதையடுத்து இந்தாண்டு மார்ச் 18ல் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு நடத்த இருந்தனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருந்ததால், ஆய்வு பணிகள் ஒத்தி வைக்கப்பட்டன. இந்நிலையில் முல்லை பெரியாறு அணை அருகே, புதிய அணை கட்ட அனுமதி கோரி, கேரள அரசு கடந்த ஜனவரியில் மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்திடம் மனு அளித்தது. மனுவை ஆய்வு செய்த அமைச்சகம், மே 14ம் தேதி நிபுணர் மதிப்பீட்டு குழுவுக்கு அனுப்பியது. இதுதொடர்பாக மே 28ல் நடக்க இருந்த ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டு குழு கூட்டத்தை, தமிழ்நாடு அரசின் எதிர்ப்பால், ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் ரத்து செய்தது. இந்நிலையில், வரும் ஜூன் 13, 14ம் தேதிகளில் கண்காணிப்பு குழுவினர் முல்லை பெரியாறு அணையில் ஆய்வு செய்ய உள்ளதாக தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

The post நிபுணர் குழு கூட்டம் ரத்து செய்யப்பட்ட நிலையில் முல்லை பெரியாறு அணையில் ஜூன் 13,14ல் கண்காணிப்பு குழு ஆய்வு: பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: